கிறிஸ்தவர் என்பதால் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா.. ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

சென்னை: எங்க மதத்துக்கு வாங்க நல்லா படிக்கலாம். பட்டதாரி ஆகலாம். சபாநாயகர் ஆகலாம். ஏன், அப்பாவு கிறிஸ்தவராக இருந்ததாலேயே, அவருக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது. இல்லை என்றால், அவர் கோயிலில் மணி அடித்துக்கொண்டு தான்…

Vanathi Srinivasan asks Stalin whether appavu was made Speaker because he is a Christian

சென்னை: எங்க மதத்துக்கு வாங்க நல்லா படிக்கலாம். பட்டதாரி ஆகலாம். சபாநாயகர் ஆகலாம். ஏன், அப்பாவு கிறிஸ்தவராக இருந்ததாலேயே, அவருக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது. இல்லை என்றால், அவர் கோயிலில் மணி அடித்துக்கொண்டு தான் இருந்திருப்பார் என பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியிருக்கிறார் என வானதி சீனிவான் கூறினார்.

மேலும் கிறிஸ்தவர் என்பதால் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், “ அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, “நாங்கள் மதம் மாற்றுவதாக, ஆர்.எஸ்.எஸ்.,காரன் சொல்றான். நாங்கள் மதம் மாற்றிக்கொண்டு தான் இருக்கிறோம். எங்கள் சர்ச் ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்.

எவ்வளவு பேர், ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறி உள்ளனர் என்பது தெரியும்.மத மாற்றமும் ஒரு வியாபாரம் தான். சந்தைக்கு சென்று மாங்காய் வாங்கப் போனால், எந்த மாங்காய் நல்லதோ, அந்த மாங்காயை தேடி வாங்குகின்றனர். அதேபோலத்தான் மத மாற்றமும்.எங்க மதத்துக்கு வாங்க நல்லா படிக்கலாம். பட்டதாரி ஆகலாம். சபாநாயகர் ஆகலாம். ஏன், அப்பாவு கிறிஸ்தவராக இருந்ததாலேயே, அவருக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது. இல்லை என்றால், அவர் கோயிலில் மணி அடித்துக்கொண்டு தான் இருந்திருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சில் இருப்பது முழுக்க முழுக்க இந்து மத வெறுப்புணர்வு மட்டுமே. அவர் இயேசு கிறிஸ்துவை நம்புவதை விட மதமாற்றத்தை தான் அதிகம் நம்புகிறார் என்று நினைக்கிறேன்.அதனால்தான் மதமாற்றத்திலேயே குறியாக இருக்கிறார். மதமாற்றம் வியாபாரம் என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இதுபோன்று, இந்து மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்துவது இது முதல் முறை அல்ல.

கடந்த 2021 ஜூலையில் கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “திமுக ஆட்சி என்பது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் போட்ட பிச்சை” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அதே கூட்டத்தில் தான், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். பாரத மாதாவையும், நாகர்கோவில் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி அவர்களையும் இழிவுபடுத்தி பேசினார். இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

திமுக அரசு அவர் மீது மென்மையான போக்கை கடைபிடித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து மதத்தின் மீதான வெறுப்புணர்வை வெளிப்படுத்திய பிறகுதான், கடந்த 2022-ல் நடைப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் அவரை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்.

திமுக ஆட்சியும், ராகுல் காந்தியின் ஆதரவும் இருக்கும் தைரியத்தில் மீண்டும் இந்து மதத்தையும், இந்துக்களையும் இழிவுபடுத்தி பேசத் தொடங்கியுள்ளார்.

கிறிஸ்தவராக மாறி இருக்காவிட்டால் அப்பாவு சபாநாயகர் ஆகியிருக்க முடியாது என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கூறியிருக்கிறார். இது உண்மைதானா? கிறிஸ்தவர் என்பதால் தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? திமுக ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர்கள் போன்ற முக்கிய பதவிகள் மதத்தின் அடிப்படையில் தான் கொடுக்கப்படுகிறதா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.

ராகுல் காந்திக்கும், ஆளும் திமுகவுக்கும் நெருக்கமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின்பேச்சை எளிதாக கடந்து சென்று விட முடியாது. அவர் இந்துக்களை கிறிஸ்துவர்களாக மதம் மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுவது அப்பட்டமாகத் .தெரிகிறது அதற்காக அவர் எதையும் செய்ய துணிந்து இருக்கிறார் என்பதையே அவரது பேச்சுக்கள் காட்டுகிறது.

எனவே பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இது போன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர், என்பதால் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அசோக் நகர் அரசு பள்ளியில் ஆன்மீகம் பற்றி பேசியதற்காக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க காட்டிய வேகத்தில் பத்தில் ஒரு பங்கு வேகத்தையாவது இரு வேறு மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுப்பதில் காட்ட வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.