ஏஐ டெக்னாலஜி வழியாக பொதுமக்கள் தாங்கள் பேசும் மொபைல் போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுவதாக பிரபல நிறுவனம் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக நாம் இணையத்தை பயன்படுத்தும் போது ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று தேடினால் உடனே அடுத்தடுத்து நாம் இணையத்தை பயன்படுத்தும் போது நாம் தேடிய பொருள் சம்பந்தமான விளம்பரங்கள் தோன்றும் என்பது தெரிந்தது. இது கூகுள் அல்காரிதம் மூலம் நாம் என்ன தேடுகிறோம் என்பதை கண்டுபிடித்து அந்த பொருட்களை மீண்டும் மீண்டும் நம் கண்முன் தோன்றும் வகையில் தெரிவிப்பது தான் மார்க்கெட்டிங் புத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தற்போது நாம் போனில் பேசும் உரையாடல்களை ஒட்டு கேட்டு நமக்கு எந்த பொருள் தேவை என்பதை இணையத்தில் நம் முன் காட்டுவது தான் தற்போதைய ஏஐ வழியான மார்க்கெட்டிங் உத்தி என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று மொபைல் போன் உரையாடல் ஒட்டு கேட்பதை ஒப்புக்கொண்டுள்ளதோடு அது சம்பந்தமான விளம்பரங்களை காண்பிப்பதையும் ஒப்பு கொண்டுள்ளது.
உதாரணமாக நாம் நம் உறவினரிடம் ஒரு டிவி வாங்க வேண்டும், ஒரு மொபைல் போன் வாங்க வேண்டும் என்று பேசினால், உடனே சில நிமிடங்களில் நம்முடைய மொபைலில் டிவி விளம்பரம் மற்றும் மொபைல் விளம்பரம் தோன்றுகிறது. இது குறித்து ஏற்கனவே பல சந்தேகங்கள் இருந்த நிலையில் தற்போது அமெரிக்க நிறுவனம் மொபைல் போன் உரையாடலை ஏஐ வழியாக ஒட்டு கேட்பதை உறுதி செய்துள்ளதை அடுத்து நாம் என்ன பேசினாலும் அது ரகசியம் இல்லை என்றும் மூன்றாவது நபர் அதை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
வளர்ந்து வரும் டெக்னாலஜியில் இது தவிர்க்க முடியாது என்பதால் நாம் தான் உரையாடலின் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.