முன்பின் தெரியாத நபர்களிடம் நட்பாக பழகி அவர்களுக்கு சயனைடு கலந்த குளிர்பானம் கொடுத்து அவர்களுடைய பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து செல்லும் பெண்கள் கும்பல் கைதாகியுள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்த மூன்று பெண்கள் சமீபத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சயனைடு கலந்து கொடுத்த குளிர்பானத்தை குடித்தவர்கள் உடனடியாக மரணம் அடைந்து விடுவார்கள் என்றும் அதன் பின்னர் அவர்களுடைய நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு இந்த பெண்கள் தப்பித்து விடுவார்கள் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் இந்த பெண்கள் கும்பல் ஒரு பெண்ணை கொலை செய்த நிலையில் மேலும் இருவரை கொலை செய்த முயன்றார்கள். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை என்பதால் உடனடியாக தப்பி ஓடிவிட்டனர். இந்த பெண்களின் ஒருவரான வெங்கடேஸ்வரி என்பவர் கம்போடியாவில் சைபர் கிரைமில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த மூன்று பெண்களிடம் இருந்து சயனைடு மற்றும் பிற ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இவர்கள் மூவருக்கும் சயனைடு சப்ளை செய்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மூன்று பெண்களும் விசாரணையின் போது தாங்கள் செய்த அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் குளிர்பானம், உணவு பொருள் கொடுத்தால் கண்டிப்பாக வாங்கி சாப்பிடக்கூடாது என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.