டேட்டிங் போக சம்பளத்தோட லீவ்.. நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு.. அந்த ஆபீஸ் அட்ரஸ கொஞ்சம் சொல்லுங்கப்பா..

Published:

இப்போது எல்லாம் பல மனிதர்களின் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது அவர்கள் பணிபுரியும் இடங்களில் இருக்கும் மன உளைச்சல்கள் மற்றும் வேலைப்பளுக்கள் தான். அரசாங்க வேலை தொடங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் வரை அவர்களது பணிபுரியும் இடம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் நிறைய எதிர்மறையான கருத்துக்களை தான் பல மணி நேரம் கூறிக் கொண்டே இருப்பார்கள்.

இன்று நிறைய இடங்களில் ரோபோட் தொடங்கி AI உள்ளிட்ட பல தொழில்நுட்ப வசதிகள் வந்து விட்டதால் மனிதர்களுக்கான வேலை வாய்ப்பு ஒரு கட்டத்தில் குறைந்து கொண்டேதான் இருக்கிறது. இதனால் தங்களுக்கும் திறமை இருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதற்காக ஒரு நாளைக்கு பாதிக்கும் மிகுதியான நேரத்தை தங்கள் பணிபுரியும் இடத்திலேயே செலவழித்து தூக்கமில்லாமலும், உணவருந்த நேரமில்லாமலும் இங்கே ஓடுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

வாரம் முழுவதும் வேலையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பலரும் வார இறுதியில் வீட்டில் இருந்தாலே போதும் என்று நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இருந்தாலும் பல தனியார் நிறுவனங்கள் இன்னும் நெருக்கடியை தான் அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கையில், தாய்லாந்து நாட்டில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று அசத்தலான அறிவிப்பை தங்களின் ஊழியர்களுக்காக அறிவித்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் ஒயிட்லைன் குரூப் என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. டிண்டர் (Tinder) என்ற டேட்டிங் செயலி மூலம் அந்த அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் ஆறு மாத காலம் மெம்பர்ஷிப் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த ஆறு மாத காலங்களுக்கு இடையே டிண்டர் செயலி மூலம் தங்களுக்கு விருப்பப்படும் நபரை தேர்வு செய்து அவருடன் டேட்டிங் லீவு செல்லவும் அதுவும் சம்பளத்துடன் ஒரு வாரம் டேட்டிங் செல்லவும் அந்த குறிப்பிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒயிட் லைன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது பணிச்சுமையால் டேட்டிங் செய்வதற்கு கூட நேரமில்லை என்றும் குற்றம் சுமத்தி இருந்தார். இதனை கவனித்த நிர்வாகத்தினர், டேட்டிங் செல்வதோ, ஒருவர் மீது அன்பு செலுத்துவதோ வேலையில் ரசித்து ஈடுபடும்படி செய்யும் என்ற ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இதனால் அந்த ஆறு மாத கால இடைவெளியில் தோன்றும் நேரத்தில் டேட்டிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிச்சயம் பலரும் டிண்டர் செயலி மூலம் தங்களின் ஜோடியை தேர்வு செய்வார்கள் என தெரிகிறது. இந்தியாவில் பல தனியார் நிறுவனங்களும் தினந்தோறும் வேலைகளை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் டேட்டிங் செல்வதற்காக சம்பளத்துடன் கூடிய விடுமுறையை தாய்லாந்து நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது, மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது.

மேலும் உங்களுக்காக...