தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? ஹைகோர்ட் கேள்வி

By Keerthana

Published:

சென்னை: தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பெரும்பாக்கம் துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் தாராளமாக இருப்பதாக வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கைக்கு பின்னர் இந்த கேள்வியை எழுப்பி உள்ளது.

சென்னையில் குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2017 ஆம் ஆண்டு பெண்ணுரிமை இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குடிசைவாசிகளுக்கு பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெரும்பாக்கம் துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து 2018 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி இப்பகுதிகளை ஆய்வு செய்து வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையில், இந்த பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் தாராளமாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் போதை மறுவாழ்வு இல்லம் அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதேபோல, தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது குறித்து காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், பள்ளி குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினர்.

போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லை? இந்த வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா? என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞரிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான காவல்துறையினரும் பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தார்.

மேலும் அவர், வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையின் அடிப்படையில் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.