கேரளாவில் நீதிபதி ஹேமா அறிக்கை வெளியானதில் இருந்து மலையாளத் திரையுலகைச் சார்ந்த பலர் அடிவயிற்றில் நெருப்பைப் கட்டியிருக்கின்றனர். எங்கே நமது பெயரும் கசிந்து விடுமோ என அச்சத்தில் தினந்தோறும் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றர். மலையாளத் திரைத்துறை மீது அழிக்க முடியாத கறையாக நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர் என்று புகார் வந்த போது கேரள அரசு நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைத்து பல நடிகைகளிடம் விசாரணை செய்தனர்.
அதில் மலையாள சினிமாவில் பாலியல் அத்துமீறல்கள் நடந்திருப்பதை உறுதி செய்து அதை அறிக்கையாக முதலமைச்சர் பிணராயி விஜயனிடம் கொடுக்க, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் தினமும் பல நடிகர் நடிகைகள் இச்சம்பவம் குறித்துப் பேசி வருகின்றனர். பலர் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களைப் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ராதிகாவும் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். அதில் மலையாள திரைத்துறை மீது சராமாரியான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். கேரளாவில் ஷுட்டிங்கின் போது நடிகைகளின் கேரவன்களில் ரகசிய கேமராக்கள் வைத்திருக்கின்றனர் என்றும், அதில் நடிகைகள் உடைமாற்றும் போது நிர்வாணக் காட்சிகளைப் பதிவு செய்து செட்டில் நடிகர்கள் ஒன்றாக உட்கார்ந்து பார்த்து ரசித்தததையும் நான் பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதனால் ராதிகா பயந்து போய் ஹோட்டலில் அறை எடுத்து தன் உடைகளை மாற்றியதாகவும் கூறியிருக்கிறார். மேலும் சக நடிகைகளுக்கும் அவர் எச்சரித்ததாகவும் கூறியிருக்கிறார். நடிகைகள் உடை மாற்றும் நேரங்களில் நான் பாதுகாப்பு கொடுத்து என்னுடைய ஹோட்டல் அறையில் இடம் கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார் ராதிகா. மேலும் கேரவன் விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை செருப்பால் அடிப்பேன் எனவும் ஆவேசமாகக் கூறியிருக்கிறார் ராதிகா.
தற்போது ராதிகாவும் மலையாள சினிமா உலகின் மீது இப்படி ஒரு குண்டைப் போட்டிருப்பது எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றினாற் போல் மேலும் பிரச்சினைக்கு வலு சேர்த்துள்ளது.