சென்னை: சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் இடையேயான 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மதியம் 12.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர், கோவை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு தினசரி வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது இதுதவிர எழும்பூரில் இருந்து நெல்லை வந்தே பாரத் ரயிலும், கோவை-பெங்களூர் இடையே ஒரு வந்தே பாரத் ரயிலும் என மொத்தம் 5 வந்தே பாரத் ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இநத 2 வந்தே பாரத் ரயில்களை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து தொடங்கி வைக்கிறார். மேலும், உத்தரபிரதேச மாநிலம் மீரட்-லக்னோ இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.
சென்னை எழும்பூா்-நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயிலானது இன்று மட்டும் சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட உள்ளது.
எனவே, ரயில் தொடக்க நிகழ்ச்சியானது சென்னை சென்டிரலில் நடைபெற உள்ளது. சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரெயிலை கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில், எம்.பி.க்கள் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
சென்னை சென்டிரலில் இருந்து இன்று (31-ந்தேதி) மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (02627), சென்னை எழும்பூர் வழியாக இரவு 9.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். குறிப்பாக, வந்தே பாரத் ரயில் இன்று மட்டும் இந்த நேரத்தில் அடிப்படையில் சென்டிரலில் இருந்து இயக்கப்பட உள்ளது.
இதேபோல, மதுரையிலிருந்து இன்று (31-ந்தேதி) மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கண்டோன்மெண்ட் செல்லும் வந்தே பாரத் ரயில் (02671) திண்டுக்கல் வழியாக இரவு 9.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்றடையும். இந்த ரயில் இன்று மட்டும் இந்த நேர அட்டவணைபடி இயக்கப்பட உள்ளது.
மதுரை – பெங்களூர் வந்தே பாரத் ரயில் (20671) வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் தினமும் அதிகாலை 5:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 5:59க்கு திண்டுக்கல் சென்றடையும். அங்கிருந்து காலை 6:01க்கு புறப்பட்டு 6:50க்கு திருச்சி சென்றடையும். பின்னர் திருச்சியில் இருந்து 6:55க்கு புறப்பட்டு 8:08க்கு கரூருக்கும், 8:32க்கு நாமக்கல் ரயில் நிலையத்திற்கும் , 9:15க்கு சேலம் ரயில் நிலையத்திற்கும், மதியம் 12:50 மணிக்கு பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்திற்கும், 1:00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கும் செல்கிறது. மதுரை – பெங்களூர் வந்தே பாரத் ரயில் மொத்த பயண நேரம் 7 மணி 45 நிமிடம் ஆகும்
மறுமார்க்கமாக பெங்களூர் மதுரை வந்தே பாரத் ரயில் மதியம் 1:30க்கு பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரத்திற்கு 1:55க்கும், மாலை 4:50 க்கு சேலம் ரயில் நிலையத்திற்கும், 5:38 க்கு நாமக்கல் ரயில் நிலையத்திற்கும், 5:58 க்கு கரூர் ரயில் நிலையத்திற்கும், இரவு 7:20 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்திற்கும், 9:08க்கு திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கும், இரவு 9:45 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கும் வந்து சேருகிறது.
சென்னை நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்: சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை (20627-20678) வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இந்தரயில் எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலை அதேநாள் மதியம் 1.50 மணிக்கு அடையும்.மறுமார்க்கமாக, இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 11 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்தரயிலில் 16 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன.