முருகன் பக்திப் பாடலில் இடம்பெற்ற ஆண்டாள் பாசுரம்.. கவிஞர் செம கில்லாடியா இருப்பார் போலயே…

By John A

Published:

தமிழ்க் கடவுள் முருகனின் அவதாரத்தினையும், சிறப்புகளையும் சினிமாவில் காட்ட விரும்பிய பக்திப் பட இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இயக்கிய திரைப்படம் தான் கந்தன் கருணை. இந்தப் படத்தினைப் பார்த்து முருகன் மேல் பக்தி கொண்டவர்கள் ஏராளம்.

அப்படியே முருகனே வந்து நேரில் நின்றால் எப்படி இருக்குமோ அந்த அளவிற்கு தனது நடிப்பைக் கொட்டியிருப்பார் சிவக்குமார். சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், சரோஜாதேவி, ஜெயலலிதா, கே.பி.சுந்தராம்பாள், நாகேஷ், குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீ தேவி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருப்பார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன், சங்கரதாஸ் சுவாமிகள் உள்ளிட்டோரின் பாடல் வரிகளில் 1967-ல் வெளியான கந்தன் கருணை மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. படத்தில் கிட்டத்தட்ட 15 பாடல்கள். இப்பாடல்கள் அனைத்தும் இன்றும் கோவில்களிலும், கார்த்திகை, மார்கழி மாதங்களிலும் இடைவிடாது ஒலிக்கும் இனிய கானங்களாகத் திகழ்கிறது. பெரும்பாலான பாடல்களை கண்ணதாசனே எழுதியிருக்கிறார்.

அப்படி கந்தன் கருணை படத்தில் அவர் எழுதிய பாடல் தான்
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு..
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு… என்ற பாடல்.

நாடகக் கம்பெனியில் எடுபிடி வேலைபார்த்த செந்தில்.. முன்னணி காமெடியனாக்கிய பாக்யராஜ்..

இந்தப் பாடலில் ஓர் சிறப்பம்சம் இருக்கிறது. அதாவது முருகன் மேல் காதல் கொண்டு தெய்வயானை பாடுவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கும். இந்தப் பாடலுக்கான சரணத்தை கண்ணதாசன் எங்கிருந்து எடுத்தார் தெரியுமா. அதுவும் தமிழ் இலக்கியத்தில் இருந்துதான். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியில் காக்கும் கடவுள் விஷ்ணுவின் மேல் காதல் கொண்டு அவரை மணம் முடிப்பதாக அமைந்த பாடலைத்தான் கண்ணதாசன் மனம் படைத்தேன் பாடலுக்கு சரணத்தில் முகவரி கொடுத்திருப்பார்.

இந்தப் பாடலை ஆண்டாள்
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக்
கைத்தளம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்

என்று எழுதியிருப்பார். அதைக் கண்ணதாசன் சற்று மாற்றி கற்பனைத் திறத்தினை ஏற்றி

மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
கனவு கண்டேன்
அந்தக் கனவுகள் நனவாக உறவு தந்தான்

என்று எழுதியிருப்பார்.