ரஜினி செய்தது சரிதான்… இயக்குனர் மகனின் குற்றச்சாட்டுக்கு ‘நச்’ பதில் கொடுத்த பிரபலம்

By Sankar Velu

Published:

ரஜினியை பைரவி படத்தில் சூப்பர்ஸ்டாராக அறிமுகப்படுத்திய இயக்குனர் தனது தந்தை எம்.பாஸ்கர். ஆனால் அவரது பெயரை ரஜினி எந்த இடத்திலும் சொல்லவில்லை. அது ரொம்ப வருத்தத்தை அளிக்குதுன்னு என்று அவரது மகன் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபகாலமாக ஊடகங்களில் குற்றச்சாட்டு முன்வைத்துக் கொண்டு இருக்கிறார்.

ரஜினி அப்படி நடந்து கொண்டதற்கு என்ன காரணம் என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த பைரவி படத்தை இயக்கியது எம்.பாஸ்கர் என்றாலும் அந்தப் படத்துக்கு ரஜினிகாந்தைக் கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்தது அந்தப் படத்தின் கதாசிரியரும், தயாரிப்பாளருமான கலைஞானம் தான். அதன்காரணமாகத் தான் எம்.பாஸ்கரோட பெயரையே ரஜினிகாந்த் பல மேடைகளில் சொல்லவில்லை. அப்படி அவர் சொல்லவில்லை என்றபோதும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் தான் ரஜினி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1978ல் ரஜினி, ஸ்ரீபிரியா நடித்த படம் பைரவி. எம்.பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்தைக் கலைஞானம் தயாரித்து இருந்தார். இந்தப் படத்தில் தான் ரஜினிகாந்த் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார்.

அவருடன் இணைந்து கீதா, ஸ்ரீகாந்த், சுருளிராஜன், மனோரமா உள்பட பலரும் நடித்து இருந்தனர். இளையராஜாவின் இசையில் கட்டப்புள்ள, நண்டூறுது, ஒரு பாதியில், ஏழுகடல் நாயகியே ஆகிய பாடல்கள் உள்ளன.

Bairavi
Bairavi

ரஜினியின் நடிப்பால் கவரப்பட்ட கலைஞானம் அவர் தான் படத்தின் ஹீரோ என்பதை உறுதிசெய்ய அவருக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு முதலில் சாண்டோ சின்னப்பா தேவர் தயாரிப்பு தரப்புக்கு உதவ முன்வந்துள்ளார். ஆனால் அவர் படத்தில் ரஜினி தான் ஹீரோ என்றதும் பின்வாங்கி விட்டாராம்.

அதைத் தயாரிப்பாளர் கலைஞானத்திடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லி இருக்கிறார். இதனால் பெரிய இழப்பு உண்டாகலாம். ஏன் ஸ்ரீகாந்தை ஹீரோவாகப் போடலாமே என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

ஆனால் கலைஞானம் விடாப்பிடியாக ரஜினி மீதுள்ள நம்பிக்கையால் அவரையே ஹீரோவாக்கி உள்ளார். அதே போல இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க முதலில் முத்துராமனிடம் தான் பேசியுள்ளார்கள்.

ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டாராம். கடைசியாகத் தான் ஸ்ரீகாந்த் வில்லனாக நடித்தாராம். படத்தின் இயக்குனர் எம்.பாஸ்கர் இந்தப் படத்தில் தான் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பின்னணியைக் கேட்டால் தான் தெரிகிறது. கலைஞானத்தை எவ்வளவோ மூளைச்சலவை செய்தபோதும் அவர் ரஜினி மீது வைத்திருந்த அபார நம்பிக்கை தான் படத்தில் ரஜினி நடிக்க காரணமாகி உள்ளது.

அதனால் தான் அந்தப் படத்தில் அவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டமும் கிடைத்துள்ளது. அந்த வகையில் படத்தை இயக்கியது மட்டும் தான் எம்.பாஸ்கர். அதனால் அவர் மீது மரியாதை வைத்துள்ளார் என்பதும், ரஜினிக்கு யாரை எங்கே எப்படி வைப்பது என்றும் தெரியாமலா இருக்கும் என்பதை இதன்மூலம் உணர முடிகிறது.