திண்டுக்கல்: தன்னிடம் பறித்த செல்போனை சினிமாவை மிஞ்சும் வகையில் நண்பர்கள் உதவியுடன் 35 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று செல்போன் திருடர்களை வேன் டிரைவர் மடக்கி பிடித்தார். தர்ம அடி கொடுத்து அவர்கள் போலீசில் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் புத்தூர் குருந்தம்பட்டியை சேர்ந்த 35 வயதாகும் சிவக்குமார் வேன் டிரைவர் ஆவார் . அவருடைய நண்பர் ஆனந்தகுமார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும், ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை நோக்கி சென்றார்கள். சிவக்குமார், பின்னால் உட்கார்ந்து இருந்தபடி செல்போனை பார்த்து கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தார்.
திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில், வெள்ளபொம்மன்பட்டி பிரிவு அருகே அவர்கள் சென்ற போது , பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென சிவக்குமாரின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு அந்த சாலையில் வேகமாக தப்பினார்கள். ஆனந்தகுமாரும், சிவக்குமாரும் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் விரட்டினார்கள். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை.
உடனே ஆனந்தகுமாரின் செல்போனை வாங்கி இதுபற்றி அய்யலூர், பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடி, கடவூர் பிரிவு, கருவார்பட்டி ஆகிய இடங்களில் அந்த பகுதிகளைச் சேர்ந்த தனது நண்பர்களுக்கு சிவக்குமார் தகவல் கொடுத்தார். உடனே மேற்கண்ட இடங்களில் அந்த நான்கு வழிச்சாலையில் அவரது நண்பர்கள் திரண்டனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் செல்போன் திருடர்கள் இருவரும் தப்பினர்.
இதைத்தொடர்ந்து எஸ்.புதுப்பட்டியில் உள்ள தனது நண்பர்களுக்கு சிவக்குமார் தகவல் அளித்தார். அவர்கள் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை வைத்து மறைத்தபடி காத்திருந்தனர். சிறிதுநேரத்தில் எஸ்.புதுப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வந்தனர். அங்கு தயாராக நின்று கொண்டிருந்த சிவக்குமாரின் நண்பர்கள் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதற்கிடையே ஆனந்தகுமாரும், சிவக்குமாரும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து சேர்ந்தார்கள்
பின்னர் இதுபற்றி வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21) மற்றும் 17 வயது சிறுவன் என்று தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
வெள்ளபொம்மன்பட்டி பிரிவு முதல் எஸ்.புதுப்பட்டி வரை சுமார் 35 கிலோமீட்டர் தூரம் தனது நண்பர்கள் உதவியுடன் சிவக்குமார் செல்போன் திருடர்களை விரட்டி சென்று பிடித்துள்ளார்.