800 பேர் புகார்.. பல கோடி மோசடி.. தேவநாதன் யாதவ்வின் ஜாமீன் மனு தள்ளுபடி.. சிக்கலாகும் விவகாரம்

By Keerthana

Published:

சென்னை: சென்னை மயிலாப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ்வின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

ஜாமீன் கோரி தேவநாதன் உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனு சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது, முதலீட்டாளர்களுக்கு பணத்தை வட்டியுடன் திருப்பி தர தயாராக இருப்பதாகவும், அதற்கான கால அவகாசத்தை நீதிமன்றம் அளிக்க வேண்டும் என தேவநாதன் தரப்பில் வாதிடப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இந்த நிதி முறைக்கேடு தொடர்பாக காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என  தெரிவிக்கப்பட்டது

தமிழக காவல்துறை தரப்பில் டி.பாபு ஆஜராகி, இந்த வழக்கில் ஒரு நிறுவனம் உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது..ஒருவர் தலைமறைவாக உள்ளார். 800க்கும் மேற்பட்டடோர் புகார் அளித்துள்ளனர்..தினமும் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேவநாதன் யாதவ் உள்பட மூன்று பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.