இன்னும் ஆதார் புதுப்பிக்கவில்லையா? வெளியான முக்கிய அப்டேட்!

By Staff

Published:

Aadhar update: மத்திய அரசு பொதுமக்களுக்கு ஆதார் அட்டையை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை அவகாசம் வழங்கியுள்ளது. இதற்கு முன்பே பல முறை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இறுதியாக இலவசமாக ஆன்லைனில் புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை அவகாசம் வழங்கியுள்ளது. பொதுமக்கள் uidai.gov.in இணையதளத்தின் மூலம் தங்கள் ஆதார் அட்டையை தாங்களே புதுப்பிக்கலாம்.

ஆதார் அட்டை இந்திய குடிமக்களுக்கு முக்கியமான ஆவணங்களில் ஒன்று. பேங்க், பத்திரப்பதிவு, மருத்துவமனை, போஸ்ட் ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை அவசியம். கேஒய்சி சரிபார்ப்புகளிலும் ஆதார் முதன்மையான ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. அதனால், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க மத்திய அரசு வலியுறுத்துகிறது. ஆதார் அட்டையில் பெயர், முகவரி, மொபைல் நம்பர், புகைப்படம் போன்ற விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். திருத்தங்கள் தேவைப்பட்டால், ஆன்லைனில் அவற்றை மாற்றிக் கொள்ளலாம்.

ஆதார் அட்டையை முறையாக புதுப்பிக்க 2016 ஆம் ஆண்டில் விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் ஆதார் அட்டை புதுப்பிக்க வேண்டும். இதற்காக, ஆதார் ஆணையம் மக்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

ஆதார் அட்டையின் விவரங்களை புதுப்பிக்க, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களுடன் ஆதார் சேவை மையத்தை அணுகலாம். அல்லது https://myaadhaar.uidai.gov.in இணையதளத்தில் புதுப்பிக்கலாம்.

ஆதார் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் 100 கோடியே 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துள்ளனர். இன்னும் 40 கோடியே 7 லட்சம் பேர் புதுப்பிக்கவில்லை எனவும், அவர்கள் உடனடியாக புதுப்பிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.