அவன் குணத்தை வச்சு ஒரு கிராமிய படமே எடுக்கலாம்னு இருக்கேன்… மிஷ்கின் பகிர்வு…

By Meena

Published:

தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளராக பணியாற்றுபவர் மிஷ்கின். இவரின் இயற்பெயர் சண்முகராஜா என்பதாகும். ஃபியோடர் தஸ்தாயெவிஸ்கியின் டி இடியட் நாவலின் நாயகனான இளவரசர் மிஷ்கினால் ஈர்க்கப்பட்டு தன் பெயரை மிஷ்கின் என்று மாற்றிக்கொண்டார்.

ஆரம்பத்தில் இயக்குனர் கதிரின் கீழ் பணிபுரிந்த மிஷ்கின், இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் சேர்ந்து யூத் மற்றும் ஜித்தன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற குறைந்த பட்ஜெட் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மிஷ்கின். இந்த திரைப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக மாறியது.

பின்னர் 2008 ஆம் ஆண்டு அஞ்சாதே, 2019 இல் நந்தலாலா, 2011 ஆம் ஆண்டு யுத்தம் செய், 2013 ஆம் ஆண்டு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார் மிஷ்கின். ஒரு கட்டுப்பாடான ஸ்கிரிப்ட் தயாரான பின்னரே மிஷ்கின் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவாராம். அவரது திரைப்படம் எடுக்கும் பாணியே வித்தியாசமாக இருக்கும் என்று அவருடன் பணியாற்றுபவர்கள் கூறுவார்கள்.

தற்போது விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் என்ற திரைப்படத்தை இயக்கி வரும் மிஷ்கின் விஜய் சேதுபதி பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அவர் கூறியது என்னவென்றால், விஜய் சேதுபதி எப்பவுமே முழுக்க முழுக்க தன்மையா இருக்கான். இந்தியாவில் இருக்கிற நடிகர்களில் இமேஜே பார்க்காத நடிகன்னா அது அவன்தான். அவன வச்சு அவனுடைய குணத்தை வச்சு சேதுபதி பெரிய மனசுக்காரன் என்ற கிராமிய படமே எடுக்கலாம்னு இருக்கேன். என் சொந்த தம்பிக்கும் மேல என் நெஞ்சில சேதுவ வச்சிருக்கேன் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.