மாமன்னன் பாத்து மாரி செல்வராஜை திட்டிய அசிஸ்டன்ட் இயக்குனர்.. வாழை படம் பார்த்ததும் செஞ்ச எமோஷனலான விஷயம்..

By Ajith V

Published:

பரியேறும் பெருமாள் என்ற முதல் திரைப்படத்தின் மூலம் சர்வதேச அரங்கம் வரை மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல் பார்த்த அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த வெற்றியின் காரணமாக இரண்டாவது படத்திலேயே தனுஷை இயக்கும் வாய்ப்பை கர்ணன் படத்தின் மூலம் பெற்றிருந்தார் மாரி செல்வராஜ். இதிலும் வெற்றி கண்டவர் மூன்றாவது திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோருடன் மாமன்னன் என்ற திரைப்படத்தையும் உருவாக்கி இருந்தார்.

பொதுவாக மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருப்பதுடன் மட்டுமில்லாமல் அவர்கள் பல ஆண்டுகளாக அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை எடுத்துரைப்பதாகவும் இருக்கும். நான் பரிகாரமும் பரியேறும் பெருமாள் திரைப்படம் வெளியான சமயத்தில் அவர் மீது அதிக பாராட்டுக்கள் இருந்த சூழலில், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய படங்கள் வெளியான போது விமர்சனங்களும் அதிகமாக இருந்தது.

குறிப்பிட்ட சாதியை சேர்ந்த மக்களை எதிர்த்து அவர் குரல் கொடுக்கிறார் என்றும் பல விதமான விமர்சனங்கள் உருவானாலும் அவரது குரல் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டே தான் இருந்து வருகிறது. அந்த வகையில் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படமாக தற்போது வாழை ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதுவும் மாரி செல்வராஜின் முந்தைய படங்களை போல பெரிய தாக்கத்தை சினிமா துறையில் ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் வாழை படம் பார்த்த அசிஸ்டன்ட் இயக்குனர் ஒருவர் செய்த விஷயத்தை பற்றி மாரி செல்வராஜ் தெரிவித்த கருத்து அதிகம் வைரலாகி வருகிறது.

“வாழை படம் தயாரான பின்னர் சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமாரை படம் பார்க்க அழைத்திருந்தேன். அப்போது அவருடன் அவரின் அசிஸ்டன்ட் இயக்குனர்களும் வந்திருந்தனர். படம் பார்த்து முடிந்ததும் அருண் குமாரின் அசிஸ்டன்ட் ஒருவர், என்னை கட்டிப்பிடித்து அழுததுடன், ‘உங்களை மாமன்னன் படம் வந்தப்போ ரொம்ப திட்டி இருக்கேன், என்னை மன்னிச்சுடுங்க’ என கூறினார்.

அவரை அருண் குமார் தேற்றிக் கொடுக்க, ‘அவன் உங்கள திட்டுனதே எனக்கு இப்ப தான் தெரியும். ஏன் திட்டுனான்னு தெரியல. ஆனா, திட்டுனத ஒத்துக்கிட்டான்ல’ என்று கூறினார். அந்த இடத்தில் தான் வாழை படம் வெற்றி பெற்றதாக உணர்ந்தேன். என் படத்தை விமர்சனம் செய்யும் அனைவருக்கும் இவன் யார், இது பற்றி பேசுவதற்கு என கேள்வி ஓடிக் கொண்டே தான் இருக்கிறது.

அப்படி என்னை பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லும் படமாக வாழை இருக்கும். நான் யார் என்பதை நீ ஏன் விவாதம் செய்கிறாய். நானே சொல்கிறேன் என்ற எனது பகிரங்க வாக்குமூலம் தான் வாழை. என்னுடைய ஒரு வருட வாழ்க்கை தான் இந்த படம். எந்த படத்தை எடுக்க வேண்டுமென சினிமா துறைக்கு வந்தேனா அதனை வாழை மூலம் நான் எடுத்து விட்டேன்” என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.