தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி இயக்குநர் என்ற ஒரு விஷயம் உள்ளது. அதாவது ஒரு படத்தை இந்த இயக்குனர் இயக்குகிறார் என்றால் தைரியமாக திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம் என்ற ஒரு நம்பிக்கையை கொடுப்பது தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர் தான் சுந்தர். சி.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இவரது திரைப்படங்களை ரசித்து பார்க்கலாம் என்ற சூழலில் பல படங்கள் வெற்றி படங்களாகவே அவருக்கு அமைந்துள்ளது. சுந்தர். சி யின் திரைப்படங்களில் மிக மிக சிறப்பம்சமாக பார்க்கப்படுவது காமெடி காட்சிகள் தான். கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், சூரி, யோகி பாபு என ஒவ்வொரு தலைமுறையிலும் சிறந்த காமெடி நடிகர்களாக இருக்கும் அனைவரையும் கச்சிதமாக பயன்படுத்தியுள்ள சுந்தர் சி, சமீபத்தில் அரண்மனை4 திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.
இந்த ஆண்டு தமிழ் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாமல் இருக்க முதல் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்திருந்தது அரண்மனை4 திரைப்படம். இதற்கு முன்பாக அவரது இயக்கத்தில் உருவான பல திரைப்படங்கள் கூட வெற்றி படங்களாக அமைந்துள்ள நிலையில் வின்னர் படத்தின் கைப்புள்ள கதாபாத்திரத்தை நிச்சயம் எளிதில் மறந்து விட முடியாது.
அப்படி ஒரு சூழலில் வின்னர் திரைப்படத்தை தான் இயக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்த விஷயத்தை பற்றி சுந்தர். சி ஒரு நேர்காணலில் தெரிவித்த விஷயம் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. “நான் ஒரு தெலுங்கு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் மிக அதிர்ச்சியாக சில விஷயங்கள் அமைந்திருந்தது. நான் இயக்கிய திரைப்படங்களின் காட்சிகளை அந்த இயக்குனர் காப்பி எடுத்து வைத்திருந்தார்.
என்னுடைய ஒரு திரைப்படத்திலிருந்து காட்சியை எடுத்திருந்தால் கூட அதன் ரைட்ஸ் மட்டும் போய்விட்டது என்று நினைத்திருக்கலாம். ஆனால் நான் இயக்கிய மூன்று திரைப்படங்களில் வரும் காட்சிகளை சேர்த்து அந்த படத்தை அவர் உருவாக்கி இருந்தார். அதன் மூலம் அந்த இயக்குனர் மீது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா மீது எனக்கு ஒரு வெறுப்பு வந்துவிட்டது.
இதனால் அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் ஒரு தெலுங்கு படத்திலிருந்து காப்பி அடிக்க வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்த ஸ்கிரிப்ட் தான் ‘வின்னர்’ திரைப்படம். அதில் தெலுங்கில் வரும் காட்சியில் இருந்து கொஞ்சம் மாற்றி வடிவேலு அந்த கோலிக்குண்டு வைத்திருக்கும் மேட்டில் விழுவது போல காமெடி காட்சி அமைத்திருந்தேன்.
ஆனால் இன்னொரு அதிர்ச்சியாக ஒரு தெலுங்கு திரைப்படத்தின் டிரைலரை பார்த்த போது நான் வின்னர் படத்தில் உருவாக்கிய காட்சியை பார்த்து அவர்களும் காப்பியடித்து வைத்திருக்கிறார்கள். நான் எங்கிருந்து சுட்டு காட்சியை உருவாக்கினேனோ அதே போல என்னிடமே இருந்து மீண்டும் அதே இன்டஸ்ட்ரியில் அவர்கள் அந்த காட்சியை எடுத்து வைத்துள்ளார்கள்” என சுந்தர். சி வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.