நாட்டில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் பிரதமர் பிரதான் மந்திரி ஜன் அவுஷதி யோஜனா. இந்தத் திட்டத்தின் மூலம் விலை அதிகமாக இருக்கும் மருந்துகள், மாத்திரைகள் அனைத்தும் வெளி மார்க்கெட்டை விட பல மடங்கு குறைந்த விலைகளில் கிடைக்கிறது. இதனால் தரமான மருந்துகளை ஏழை, எளிய மக்கள் வாங்கி பயனடையும் நோக்கில் இத்திட்டம் மத்திய அரசால் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் தனி நபர்களும் சுயவேலை வாய்ப்பினைப் பெறும் நோக்கில் 10 சதுர மீட்டர் இடம் இருந்தாலே தனியாக மலிவு விலை மருந்தகங்களை அமைத்துத் தரவும் வழிவகுக்கிறது.
கோட் படத்தின் புதிய போஸ்டரில் பிரேம்ஜி லுக்கில் இருந்த சூப்பர் ரகசியம்.. குஷியான சிஎஸ்கே ரசிகர்கள்..
தற்போது இத்திட்டத்தினைப் போலவே தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் முதல்வர் மருந்தகம் என்ற பெயரில் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளார். பொதுப் பெயர் வகை மருந்துகள் மற்றும் பிற மருந்துகளைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில் முதல்வர் மருந்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 1000 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. இதனைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நோக்கில் மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் ரூ. 3 இலட்சம் கடனும் இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.
ஏற்கனவே தமிழகத்தில் கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் கூட்டுறவு மருந்தகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் வேளையில் தற்போது இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு இனி முதல்வர் மருந்தகம் என்ற பெயரில் தமிழகம் முழுக்க குறைந்த விலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 2025 பொங்கல் திருநாளன்று இத்திட்டம் அமலுக்கு வரும் என சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.