இளையராஜாவை இசையமைக்க வைத்த 8 நிமிட வீடியோ.. ஜமா பட இயக்குநர் பாரி இளவழகனின் அனுபவம்

By John A

Published:

கிட்டத்தட்ட 1100 படங்களுக்கு மேல் இசையமைத்து உலக சினிமாவிலும், இசையுலகிலும் பெரும் சக்தியாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. கதை, நடிகர்கள் எல்லாம் இரண்டாம் பட்சம். இளையராஜா இருந்தால் போதும் எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் அவர் பார்த்துக் கொள்வார்.

மொத்தப் படத்தினையும் தன்னுடைய தோளில் தாங்கி ஏராளமான ஹிட் கொடுத்து சினிமா பிடிக்காதவர்களையும் தனது இசையால் வசீகரித்து வைத்திருப்பவர்தான் இசைஞானி. குறிப்பாக மண்மணம் சார்ந்த இசை என்றால் அது இசைஞானியைத் தவிர வேறொருவரை யோசித்துக் கூட பார்க்க முடியாது.

அப்படி இளையராஜா சமீபத்தில் இசையமைத்து மீண்டும் இசைக்காகவே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படம் தான் ஜமா. சில படங்களுக்கு விளம்பரம் அதிகம் இருக்கும். ஆனால் அதிகமான விளம்பரங்கள் இன்றி சப்தமில்லாமல் தெருக்கூத்துக் கலைஞர்கள் வாழ்வியலைக் கொண்ட தன்னுடைய கதையை நம்பி முன்னர் சொன்னது போல் இளையராஜாவின் கையில் படத்தைக் கொடுத்து இன்று சாதித்துக் காட்டியிருக்கிறார் ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன்.

கடந்த ஆகஸ்ட் 1-ல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது ஜமா திரைப்படம். இப்படத்தினை நடித்து இயக்கியிருக்கிறார் பாரி இளவழகன். சேத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்துல உங்க நடிப்பு திருப்தி இல்லைன்னா நீங்க வேண்டாம்.. நடிகர் பகவதி பெருமாளிடம் ஓப்பனாகக் கூறிய புதுமுக இயக்குநர்..

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க எப்படி ஒப்புக் கொண்டார் என்று பாரி இளவழகன் கூறும் போது, “ஜமா படத்திற்காக நான் எப்படி வரப்போகிறது என்பது குறித்த வீடியோ ஒன்றைத் தயார் செய்து வைத்திருந்தேன். தயாரிப்பு தரப்பில் இசைக்கு யார் என்று கேள்வி வந்த போது இளையராஜா ஐயா என்று கூறினேன்.

என்ன விளையாடுறீங்களா என்று கேட்டார்கள். ஆனால் நான் இளையராஜா ஐயா தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். முயற்சி செய்து பார்ப்போம் இல்லையென்றால் விட்டுவிடுவோம் என்ற ஐயப்பாட்டுடன் இளையராஜா ஐயாவை அணுகிய போது அவரிடம் நான் பேசிய முதல் வார்த்தையே நான் திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன் என்று சொன்னதும் என்னை ஏறெடுத்துப் பார்த்தார். அதன்பின் நான் தயார்செய்து வைத்திருந்த படத்திற்கான முன்னோட்டத்தை அவரிடம் காட்டினேன். சுமார் 8 நிமிடங்கள் வரை பொறுமையுடன் பார்த்தார்.

அதன்பின் என்னிடம் சரி சொல்றேன் என்று கூறி அனுப்பி விட்டார். தயாரிப்பு தரப்பிலிருந்து கேட்ட போது என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. அதன்பின் சில நாட்கள் கழித்து இளையராஜாவின் ஸ்டுடியோவிற்குப் போன் செய்து விபரம் கேட்க, சார் உங்களுடைய படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று கூறியபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. நான் யார் என்று கேட்வில்லை, என்னுடைய பின்புலம் கேட்கவில்லை, அந்த 8 நிமிட வீடியோ ஒன்று மட்டுமே என்னுடைய வேலையைப் பேசியிருக்கிறது. இப்படித்தான் இளையராஜா ஐயா இந்தப் படத்திற்கு இசையமைத்தார் என்று கூறியிருக்கிறார்” ஜமா பாரி இளவழகன்.