மீண்டும் ஹிண்டன்பர்க் கிளப்பிய புயல்.. இம்முறை சிக்கியது அதானி மட்டுமல்ல.. செபி தலைவரும்..!

By Bala Siva

Published:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹிண்டன்பர்க்  நிறுவனம் அதானி குழும நிறுவனங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இதை கையில் எடுத்து தேர்தல் பிரச்சாரத்திலும் பயன்படுத்தினார்கள். இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் படு வீழ்ச்சி அடைந்த நிலையில் அதன் பின்னர் அதானி நிறுவனம் விளக்கம் அளித்த நிலையிலும், சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையிலும் மீண்டும் அதானி குழுமங்களின் பங்குகள் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அதானி குழுமம் நிறுவனங்களின் மீது ஹண்டன்பர்க் குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அதானி நிறுவனம் வெளிநாடுகளில் நடத்தி வரும் போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச்  என்பவர் ஆயிரக்கணக்கான பங்குகளை வைத்திருப்பதாக தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

அதனால் தான் செபி, அதானி குழும நிறுவனங்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்றும் சந்தேகத்தை கூறியுள்ளது. செபி தலைவர் மாதபி புரி புச்  மற்றும் அவருடைய கணவர் ஆகிய இருவருமே அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதாக கூறப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஹிண்டன்பர்க்  அறிக்கை குறித்து காரசாரமாக அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில் இது குறித்து மாதபியும் அவருடைய கணவரும் விளக்கம் அளித்துள்ளனர் எங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் செபியிடம் வழங்கி இருக்கிறோம், நாங்கள் தனிப்பட்ட குடிமக்களாக இருந்த காலகட்டம் உள்பட அனைத்து நிதி ஆவணங்களையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் நாங்கள் வெளிப்படுத்த தயாராக இருக்கிறோம். உரிய நேரத்தில் இது குறித்து விரிவான அறிக்கைகளையும் வெளியிடுவோம். மீண்டும் ஹிண்டன்பர்க்  இத்தகைய முயற்சியில் இறங்கி இருப்பது துரதிஷ்டமானது என்று தெரிவித்துள்ளனர்.