அதிக சம்பளத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரை கட்டாய ராஜினாமா மூலம் வெளியேற்றிவிட்டு குறைந்த சம்பளத்தில் ஒருவரை வேலைக்கு அமைத்துக் கொள்ளும் நடவடிக்கையை பல ஐடி நிறுவனங்கள் செய்து வருகின்றன என்று லிங்க்ட்-இன் பிரபலம் ஒருவரின் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு நிறுவனமும் தங்களது ஊழியர்களின் நலனை பற்றி கவலை கொள்வதில்லை என்றும் ஊழியர் இடம் இருந்து தேவையான வேலையை வாங்கிவிட்டு அதன் பிறகு அந்த ஊழியருக்கு பதிலாக குறைந்த ஊதியத்தில் இன்னொருவரை வேலைக்கு அமர்த்தி முந்தைய ஊழியரை கட்டாய ராஜினாமா செய்ய வைக்கின்றது என்று அவர் பதிவு செய்துள்ளார்.
சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை கட்டாய ராஜினாமா முறையை கையாண்டு வருகிறார்கள் என்றும் இதனால் பல ஊழியர்கள் உண்மையாக உழைத்த போதிலும் ஒரு நாள் திடீரென ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும் அதனால் அவருடைய மற்றும் அவருடைய குடும்பத்தின் நிதி சூழல் மிகவும் பாதிப்படைகிறது என்றும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இவரது பதிவிற்கு பலர் கமெண்ட் பதிவு செய்துள்ளனர். தங்களுடைய அனுபவங்களையும் தாங்கள் கட்டாய ராஜினாமா செய்யப்பட்டதையும் பலர் பகிர்ந்து உள்ளனர். பல ஐடி நிறுவனங்கள் ஒரு ஊழியரிடம் இருந்து தேவையான அளவுக்கு வேலையை கசக்கி பிழிந்து விட்டு அதன் பிறகு வேறொரு ஊழியரை குறைந்த சம்பளத்திற்கு அமர்த்தியும் அதே பணியை செய்ய வைத்து வருகின்றன என்பதும் அந்த ஊழியரை அவராகவே ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டி வருவதாகவும் நீங்களாக வெளியேறி சென்றால் நன்றாக இருக்கும் இல்லாவிட்டால் பிளாக் மார்க் ஏற்படும் என்று மிரட்டுவதாகவும் பலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
பொதுவாக ஒரு ஊழியர் ராஜினாமா செய்ய விரும்பினாலோ அல்லது ஊழியரை நிறுவனம் வெளியேற்ற விரும்பினாலோ மூன்று மாதங்களுக்கு முன் தகவல் சொல்ல வேண்டும். அதற்கான தகுந்த காரணங்களும் சொல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த நடைமுறையை கடைப்பிடிப்பதில்லை என்றும் மூன்று மாத ஊதியத்தை முன்கூட்டியே தந்து உடனடியாக வேலையிலிருந்து அனுப்புவதில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன கூறப்படுகிறது.
எனவே இன்றைய சூழ்நிலையில் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் சூழ்நிலையில் எந்த நேரத்திலும் வேலை இழப்பு ஏற்படலாம் என்பதை மனதில் கொண்டு முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்வது, இன்னொரு வேலையை தயாராக வைத்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.