சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 14ம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரும், சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே கரூரில் பண மோசடி வழக்கிலும் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். கரூர், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவபர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரிடம் 7 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதற்காக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்தது. இதேபோல் கோவை சைபர் கிரைம் வழக்கிலும் ஜாமீன் கிடைத்துவிட்டது. அத்துடன் டெல்லியில் உச்ச நீதிமன்றமும் சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
எனினும் குண்டாஸ் தேவையா இல்லை என்பதை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து குண்டாஸ் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது,
காவல்துறை தரப்பில், சவுக்கு சங்கர் தொடர்ந்து இதுபோல அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், அதனை தடுக்கவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைததிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு, நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளார்கள்.