நாகர்கோவிலில் ஓவர் நைட்டில் சம்பவம்.. பத்திர ஆபிஸில் வேலை செய்த அத்தனை பேரும் இப்ப ஜெயிலில்

By Keerthana

Published:

 

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த ஐந்து மாத கர்ப்பிணி பெண் சார் பதிவாளர் உள்பட 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

அரசின் விதிமுறைகளுக்கு உட்படாத விவசாய நிலங்கள், பாதை வசதி இல்லாத நிலங்கள், வீட்டு மனைகள் போன்றவற்றை சட்ட விரோதமாகவும், முறைகேடாகவும் பத்திரப்பதிவு செய்தால் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஆனால் சில சார் பதிவாளர்கள் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது. அப்படித்தான் தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தின் சார்பதிவாளராக பணியாற்றியவர் மேகலிங்கம். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 2 நாள் விடுப்பில் சென்றிருந்தார். விடுப்புக்கு முதல்நாள் மாலைவரை இவர் பணியில் இருந்தார். மாலையில் பணி முடிந்து இவர் வீட்டுக்குச் சென்ற பிறகு 33 வயதாகும் சுப்புலட்சுமி ,மாலையில் இருந்து இரவு வரை தோவாளை பொறுப்பு சார் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அன்றைய தினத்திலேயே தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் மேகலிங்கத்தால் நிலுவையில் வைக்கப்பட்டு இருந்த பத்திரங்களை முறைகேடாக பதிவு செய்தாராம். அவ்வாறு முறைகேடாக 25-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து 2 நாட்கள் விடுப்பு முடிந்து பணிக்கு வந்த தோவாளை சார் பதிவாளர் மேகலிங்கம் தான் விடுப்பில் சென்ற தினத்துக்கு முந்தைய நாளில், அதாவது தனது பணி நாளிே்லயே நிலுவையில் வைக்கப்பட்டு இருந்த 25-க்கும் மேற்பட்ட பத்திரங்களை முறைகேடாக பதிவு செய்திருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விடுப்புக்கு முந்தைய நாளான, மேகலிங்கம் பணியாற்றிய நாளிலேயே 25-க்கும் மேற்பட்ட பத்திரங்களை சுப்புலெட்சுமி முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததும், அவருக்கு உடந்தையாக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் நெல்லை மாவட்டம் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த தனராஜா (50), தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நம்பிராஜன், டெல்பின், இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஜெயின் ஷைலா ஆகியோர் இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார், பெண் அதிகாரி சுப்புலெட்சுமி உள்பட 5 பேரையும் நேற்று மாலையில் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.