வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்குப் பின்னால் மிகப் பெரிய சதி உள்ளது.. மல்யுத்த வீரர் விஜேந்தர் சிங்

By John A

Published:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறுகின்ற 33-வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தங்கப் பதக்கம் வெல்வார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத் அடுத்தடுத்து ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். இன்று அமெரிக்க வீராங்கனையுடன் நடைபெறவிருந்த இறுதிப் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் அவர் பங்கேற்கத் தயாராக இருந்த போது உடல் பரிசோதனையில் அவர் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்ததால் ஒலிம்பிக் விளையாட்டிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கு நாடு முழுவதிலிருமிருந்து கடும் கண்டனங்கள் வரும் வேளையில் இரவெல்லாம் பயிற்சி செய்து தன்னுடைய எடையை சரியாக்க கடும் முயற்சி எடுத்திருக்கிறார் வினேஷ் போகத். இதனால் அவரது உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி உஷா நேரில் சந்தித்தார். மேலும் வினேஷ் போகத் போட்டியிடாததால் வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து இந்தியாவிற்கு முதன் முறையாக மல்யுத்தப்பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றுத் தந்த மல்யுத்த வீரரும், பா.ஜ. நிர்வாகியுமான விஜேந்தர் சிங் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்குப் பின்னால் சதி இருக்கிறது. எங்களைப் போன்ற குத்துச் சண்டை மல்யுத்த வீரர்களால் ஒரே இரவில் 5-6 கிலோ எடையைக் குறைக்க முடியும்.

100 கிராம் எல்லாம் ஒரு பொருட்டு கிடையாது. மேலும் எங்களுக்கு பசி, தூக்கத்தையும் கட்டுப்படுத்தத் தெரியும். விளையாட்டில் வினேஷ் போகத் சாதிப்பதைப் பிடிக்காதவர்கள் செய்த சதியாகவே இதைக் கருதுகிறேன்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடியும் வினேஷ் போகத்துக்கு நீங்கள் இந்தியாவின் பெருமை, இந்தியாவின் சாம்பியன், இந்தப் பின்னடைவு வேதனை அளிக்கிறது என்றும், வருத்தத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...