கடந்த 1912 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஏரி ஒன்றின் அருகே 4 வயது சிறுவன் காணாமல் போன நிலையில், 8 மாதங்கள் கழித்து நடந்த சம்பவமும் அதன் பின்னால் ஒளிந்திருந்த மர்மங்களும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. Bobby Dunbar என்ற 4 வயது சிறுவன் கடந்த 1912 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது தந்தை பெர்சி டன்பார் மற்றும் குடும்பத்தினருடன் Swayze Lake என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளான்.
ஆனால், அந்த சமயத்தில் திடீரென சிறுவன் பாபி காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த ஏரியின் அருகே ரயில் பாலம், அடர்ந்த காடு உள்ளிட்ட பகுதிகள் இருந்துள்ளது. அங்கெல்லாம் தேடியும் சிறுவனை குறித்து எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிகிறது. ஒட்டுமொத்த நாடே 4 வயது சிறுவன் மர்மமாக தொலைந்து போனது பற்றி அதிர்ந்து போக பல இடங்களில் போலீசாரும் தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர்.
ஆனால், எந்த விதத்திலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. சிறுவன் பாபி டன்பரை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் கிடைக்கும் என அறிவித்தும் பலனளிக்கவில்லை. இதனிடையே, சுமார் 8 மாதங்கள் கழித்து சிறுவன் காணாமல் போன விவகாரத்தில் ஒரு திருப்புமுனை உருவாகி உள்ளது.
மிஸ்சிஸிப்பி பகுதியில் வைத்து 1913 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிறுவன் பாபியின் உருவத்துடன் ஒத்திருக்கும் சிறுவனுடன் பயணித்த வில்லியம் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அது பாபி தான் எனக்கூற வில்லியமோ, தனது பெற்றோர்களை பார்த்துக் கொள்ளும் ஜூலியா என்ற பணிப்பெண்ணின் மகன் ப்ரூஸ் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதனை நம்பாத போலீசார் அந்த சிறுவனை அழைத்து கொண்டு பாபி டன்பரின் பெற்றோரிடம் கொண்டு சென்றுள்ளனர். தங்கள் மகனை போல இருந்தாலும் சில வித்தியாசங்கள் இருப்பதாக பாபியின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சிறுவனால் தங்களின் பெற்றோர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால், அதே வேளையில் சிறுவனின் உடலில் இருந்த வடு மற்றும் மச்சங்கள் அது பாபி டன்பர் தான் என அவரது தாயார் லெஸ்ஸி இரண்டாவது முறை பார்க்கும் போது நம்ப வைத்துள்ளது. ஆனால், வில்லியமின் பணிப்பெண்ணான ஜூலியா இந்த சம்பவம் அறிந்து தனது மகன் ப்ரூசை அழைத்து செல்ல வந்துள்ளார்.
அந்த காலத்தில் டிஎன்ஏ பரிசோதனை இல்லாததால், ஜூலியாவால் தனது மகனை சில சோதனைகளில் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இதனால், பாபி டன்பர் என அந்த சிறுவன் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் மகன் திரும்ப கிடைத்த விஷயம், அவர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. ஜூலியா தனது மகனை இழந்த வேதனையில் கிளம்ப, சுமார் 92 ஆண்டுகளுக்கு பிறகு பாபி டன்பர் என கருதப்பட்டு வளர்ந்த சிறுவன் மறைந்த பின்னர் அவரது பேத்தியான மார்கரெட் தனது குடும்பத்தினர் குறித்து டிஎன்ஏ சோதனையை மேற்கொண்டுள்ளார்.
அப்போது தான் 1912 ஆம் ஆண்டு காணாமல் போய் மீண்டும் கிடைத்த சிறுவன் பாபி டன்பர் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் அது ஜூலியாவின் மகள் தான் என்பதும் தெரிய வர, சுமார் 100 வருடங்களுக்கு பிறகு இந்த தகவலை அறிந்து அனைவருமே அதிர்ந்து போயுள்ளனர். இதனால், காணாமல் போன பாபி டன்பர் என்ற சிறுவன் என்ன ஆனான் என்ற விஷயம் இன்னும் மர்மமாகவே உள்ளது.