Udayanidhi Stalin| டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள், மாணவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன 3 குட்நியூஸ்

By Keerthana

Published:

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூன்று குட்நியூஸ்களை வெளியிட்டுள்ளார். ஒன்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு.. இரண்டாவது தனியார் பள்ளியில் படிப்பவர்களுக்கு.. 3 வது குட்நியூஸ் மாணவர்களுக்கு.. மூன்றை பற்றியும் பார்ப்போம்.

தமிழகத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் 10, பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 4 ஆயிரத்து 43 தனியார் பள்ளிகளுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சர்வதேச, தேசிய, மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 4ம் தேதி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கும், சர்வதேச, தேசிய, மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு இந்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தனியார் பள்ளிகள் வழங்கும் ஒத்துழைப்பு முக்கியமானது ஆகும்.

குட்நியூஸ் 1 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்காக நூலகம்: பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, உயர்கல்வியில் சேராமல் இருக்கும் மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களை உயர்கல்வியில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தனி முயற்சி எடுத்து வருகிறது. அதேபோல், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு எல்லா விதத்திலும் உதவ நிச்சயம் தயாராக இருக்கிறது. எனவே மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நூலகம் கோவை, திருச்சியில் விரைவில் அமையப் போகிறது.

குட்நியூஸ் 2 தனியார் பள்ளிகளுக்கு: கட்டாய கல்வி உரிமைச் சட்டம் படி, ஏழை, எளிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளிகளுக்கு தமிழக அரசே வழங்க வேண்டும். முந்தைய ஆட்சிக் காலங்களில் இந்த தொகையை தாமதமாகத்தான் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனி வரும் கல்வியாண்டுகளில் கல்வி கட்டண தொகையை அந்தந்த ஆண்டே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

குட்நியூஸ் 3: ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்புகளை தயவு செய்து கடன் வாங்கி, கணிதம், அறிவியல் வகுப்புகள் நடத்த வேண்டாம். ஏனென்றால், கல்வி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு உடற்பயிற்சியும் விளையாட்டும் முக்கியம். நன்றாக விளையாடும் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியம் கண்டிப்பாக இருப்பது அவசியம். நல்ல ஆரோக்கியம் இருந்தால் நன்றாக படிப்பார்கள். எனவே, விளையாட்டு வகுப்புகளை தயவு செய்து கடன் வாங்க வேண்டாம்” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.