திடீரென 15000 ஊழியர்களை வெளியேற்றும் இன்டெல் நிறுவனம்.. அதிர்ச்சி தகவல்..!

By Bala Siva

Published:

உலகின் முன்னணி கம்ப்யூட்டர் சிப் உற்பத்தியில் இருக்கும் இன்டெல் நிறுவனம் 15000 ஊழியர்களை திடீரென வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் தங்களது அலுவலகங்களில் பணியாற்றி வரும் 15 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக இன்டெல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்டெல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இது குறித்து கூறிய போது ‘இந்த நடவடிக்கை மூலம் இன்டெல் நிறுவனம் அடுத்த ஆண்டு 10 பில்லியன் டாலர்கள் சேமிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை உண்மையில் மிகவும் வருந்தத்தக்கது தான் என்றும், ஆனால் நிறுவனத்தை  லாபகரமாக கொண்டு செல்வதற்கு வேறு வழியில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பணி நீக்க மட்டுமின்றி நிறுவனத்தின் நிர்வாக பணிகளை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளதாகவும் எதிர்பார்த்த வருவாய் இல்லாததால் பணி நீக்க நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏஐ டெக்னாலஜியை முழுமையான பயன்படுத்தாதது,  செலவினங்கள் அதிகரிப்பது உள்ளிட்ட காரணத்தினால் இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்டெல் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி கம்ப்யூட்டர் சிப் நிறுவனமே இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் பணி நீக்கம் செய்யப்படும் 15 ஆயிரம் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் இன்டெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏற்கனவே ஏஐ டெக்னாலஜி காரணமாக வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் இன்டெல் 15000 ஊழியர்களை வேலையில் இருந்து வெளியேற்ற எடுத்திருக்கும் நடவடிக்கை துரதிர்ஷ்டமானது என்று கூறப்பட்டு வருகிறது.