இன்று தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பலரும் கேட்கும் பாடலாக மாறி இருப்பது, ராயன் படத்தில் வரும் ‘அடங்காத அசுரன்’ தான். தனுஷ் வரிகள் எழுத, அவரும் ஏ. ஆர். ரஹ்மானும் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்து வருகிறது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என எதை திறந்தாலும் இந்த பாடலே ஒலிப்பதுடன் பலரும் இதனை ரிங் டோனாகவும் வைத்துள்ளனர்.
இது ஒரு குத்துபாடலாக இருந்தாலும் நடுவே ரஹ்மானின் குரலில், ‘உசுரே நீ தானே’ என்ற ஒரு சில வரிகள் தான் இதன் உயிர்நாடி. அந்த ரஹ்மான் குரல் ஆரம்பமானதும் நமது மனதிலும் ஒரு வித சிலிர்ப்பு ஒட்டிக் கொள்ளும். நமக்கு நெருக்கமான யாருடன் வேண்டுமானாலும் அந்த வரிகளை தொடர்புபடுத்தி கற்பனை செய்து கொள்ளலாம் என்பதால் அவை மிக ஆழமாகவும் மக்கள் மனதில் பதிந்து விட்டது.
ராயன் பாடல்கள் வெளியாவதற்கு முன்பாக ரஹ்மான் பணிபுரிந்த சில திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால், அவர் மீது விமர்சனங்கள் உருவாக, இனிமேல் ரஹ்மான் பாடல்கள் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணாது என்றும் குறிப்பிட்டனர். ஆனால் ராயன் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கேட்டதும் தெரியாமல் அப்படி விமர்சனம் செய்து விட்டோம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இப்படி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கு மேலான போதிலும் இன்னமும் மதிப்பு குறையாத வைரம் போல இசை ராஜ்ஜியம் நடத்தி வரும் ஏ. ஆர். ரஹ்மான், தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் பிசியாக பணிபுரிந்து வருகிறார்.
அப்படி ஒரு சூழலில், ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான சில ஆண்டுகளில் அவரது ஸ்டூடியோவில் அவரை சந்தித்து அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கேட்ட பாடல் தொடர்பான செய்தி, பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் தான் ஏ.ஆர். ரஹ்மான்.
அந்த படத்தில் இருந்து இன்று வரை மணிரத்னம் இயக்கி வரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரஹ்மான் தான் இசையமைத்து வருகிறார். அப்படி இந்த பிளாக்பஸ்டர் காம்போவில் உருவான திரைப்படம் தான் பாம்பே. அரவிந்த் சாமி மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் உருவான இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் பாடல்களும் இன்று வரை பலரின் ஃபேவரைட் ம்யூசிக் ஆல்பமாக உள்ளது.
இந்த படத்திற்கான பாடல்கள் தயாராகி வந்த போது ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்றுள்ளார். அத்துடன் சமீபத்தில் இசையமைத்த பாடல் ஒன்றை போடுமாறும் விரும்பி கேட்டுள்ளார். உடனடியாக, வைரமுத்து வரிகளில் பாம்பே படத்தில் வரும் கண்ணாளனே என்ற பாடலையும் ரஹ்மான் ஜெயலலிதாவிற்கு போட்டு காட்டியுள்ளார்.
இந்த பாடல், ஒரு ஆணை பார்க்கும் பெண்ணிற்கு நிகழும் மாற்றங்கள் குறித்து சற்று வெளிப்படையாகவே வார்த்தைகள் இருந்தும் அந்த ரசனைக்காக ரஹ்மான் தைரியமாக போட்டுள்ளார். இதனை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போது விரும்பி கேட்டதுடன் பாராட்டியாதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.