நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் வயநாடு நிலச்சரிவு இயற்கைப் பேரழிவில் கேரளாவிற்கு அண்டை மாநிலங்கள் உதவிக் கரம் நீட்டியிருக்கிறது. மேலும் இராணுவமும், மத்திய அரசும் உடடினயாக களத்தில் இறங்கி நிலைமையை சீர் செய்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. மேலும் மழையும் குறைந்த பாடில்லை. இதனால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை மகாராஷ்டிராவில் ஆரம்பித்து இந்தியாவின் கடைக்கோடி நகரமான கன்னியாகுமரி வரை 1600 கி.மீ. நீண்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய ஆறுகள், பல்லுயிர்ப் பெருக்கம், ஏராளமான கனிமவளங்கள், நீர்வளம் மிகுந்து காணப்படுகிறது. இப்பகுதி பாதுகாக்கப்பட்ட சூழலியல் மண்டலமாகவும் திகழ்கிறது.
அரிய வகை மரங்கள், விலங்குகள், உயிரினங்கள் என இந்தியாவின் இயற்கை வளத்தில் குறிப்பிட்ட பகுதியை இந்த மேற்குத் தொடர்ச்சி மலை ஆக்கிரமித்து இயற்கையின் கொடையாகத் திகழ்கிறது.
இந்தப் மலைப்பகுதியில் பல்வேறு கோடைவாசஸ்தலங்கள் உள்ளன. ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி, கூர்க், முதுமலை, வால்பாறை என முக்கிய ஊர்களும், சரணாலயங்களும் உள்ளன.
இப்படி பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்த இப்பகுதியைப் பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும் என சூழலியல் பேராசிரியரும், உயிரியல் விஞ்ஞானியுமான மாதவ் காட்கில் தலைமையில் கடந்த 2010ல் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு. அந்தக் குழு 2011-ல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
எனினும் இந்த அறிக்கையை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மற்றுமொரு குழுவை நியமித்து 2013-ல் நியமித்து அந்தக் குழு தந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் மாதவ் காட்கில் தலைமையிலான அறிக்கையில் வயநாடு பகுதிகள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் இதை கேரள அரசு கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அப்பகுதிகிளில் உள்ள நிலங்களுக்கு கட்டிட அனுமதி கொடுப்பது, சொகுசு விடுதிகள் அமைப்பது உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கொடுத்தது கேரள அரசு. அதன் விளைவை இப்போது சந்தித்திருக்கிறது.
வயநாடு போல் நீலகிரி மலையிலும் இதுபோன்றதொரு பகுதிகள் உள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே பெரும் அபாயங்கள் ஏற்படும் முன்னர் தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுச் சுழல் ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.