கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் எழுதும் முன்பே அவர் வசனகார்த்தாவாக பல படங்களில் பணியாற்றியிருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாது. 1950-களில் கண்ணதாசன் கை வண்ணத்தில் வந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது என்பது பலருக்கும் ஆச்சர்யத்தைத் தரலாம்.
பருவ வயதிலேயே எழுத்துப் பணியில் தீராத ஆர்வம் கொண்ட கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இணைந்து அறிஞர் அண்ணாவை தலைவராகக் கொண்டார். கல்லக்குடி போராட்டத்தில் சிறைக்குச் சென்ற கண்ணதாசனின் குடும்பம் வறுமையில் சுழல மார்டர்ன் தியேட்டர் அதிபர் டி.ஆர். சுந்தரம் அவருக்கு முதன் முறையாக ‘இல்லற ஜோதி’ என்ற படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பினை வழங்குகிறார்.
இல்லற ஜோதி படத்தினைப் பார்த்து மிரண்டு போனார்கள் கண்ணதாசன் நண்பர்கள். அவர் மேல் பொறாமை கொண்டு அவருக்கு எதிராக கருத்துக்களைப் பரப்பத் தொடங்கினார்கள். ஆனாலும் தன் மேல் விழுந்த எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாக்கி தொடர்ந்து நானே ராஜா, தெனாலி ராமன் உள்ளிட்ட படங்களுக்கும் வசனம் எழுத எம்.ஜி.ஆரின் படங்களுக்கும் வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது. எம்.ஜி.ஆருக்கு மதுரை வீரன், மகாதேவி உள்ளிட்ட படங்களில் எழுத படம் வரலாற்று வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் கண்ணதாசன் தான் தனியாக பட நிறுவனத்தினை ஆரம்பித்து அதில் முதன் முறையாக எம்.ஜி.ஆரை நடிக்க வைக்க அணுகுகிறார். பிரம்மாண்டமாக பூஜை போடப்பட்டு ஊமையன் கோட்டை என்று தலைப்பிடப்பட்ட அந்தப் படத்தின் ஷுட்டிங் ஆரம்பமானது. எம்.ஜி.ஆர் வேறு படங்களில் பிஸியானதால் இறுதியாக எம்.ஜி.ஆர் காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம் என எண்ணியவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கண்ணதாசனின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் எம்.ஜி.ஆரிடம் புறங்கூற எம்.ஜி.ஆர் மனதில் ஓர் தயக்கம் ஏற்பட்டது. இதனால் கண்ணதாசனை தவிர்த்தார். ஊமையன் கோட்டை படம் கைவிடப்பட்டது. அறிஞர் அண்ணா கண்ணதாசனிடம் எம்.ஜி.ஆரிடம் நான் பேசுகிறேன். நீங்கள் படத்திற்குத் தயாராகுங்கள் என்று கூறிய போதும் இனி வேண்டாம் என்று ஒதுக்கினார் கண்ணதாசன்.
என்னுடைய சினிமா கேரியரில் நான் பண்ணின பெரிய தப்பு இதுதான்… பப்லூ பிருத்விராஜ் ஆதங்கம்…
இதனையடுத்து அடுத்து ஒரு படம் தயாரிக்கலாம் என எண்ணி சரத் சந்திர சாட்டர்ஜியின் கதை ஒன்றை தழுவி கண்ணதாசன் மூன்று மணி நேரத்தில் ஒரு கதையைத் எழுதினார். இந்தப் படத்திற்கு கதாநாயகனாக நடிக்க நாகேஸ்வரராவை அணுகினார்.
ஆனால் அங்கும் கண்ணதாசனைப் பற்றி சிலர் அவரிடம் புறங்கூற அவரும் நடிக்க முன்வரவில்லை. இந்த அவமானங்களை எல்லாம் நெஞ்சில் உரமாக்கி பின் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து அதற்கு முன்னர் சூப்பர் ஸ்டாராக இருந்து வாய்ப்பின்றி வறுமையில் உழன்ற டி.ஆர். மகாலிங்கத்தைச் சந்தித்து மாலையிட்ட மங்கை படத்தின் கதையைக் கூறுகிறார் கண்ணதாசன்.
டி.ஆர். மகாலிங்கம் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி கண்ணதாசனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து அப்படத்தில் நடிக்கிறார். மாலையிட்ட மங்கை மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் மொத்தம் 17 பாடல்கள். இவற்றில் சில பாடல்களை டி.ஆர். மகாலிங்கமே பாடினார்.
மேலும் ஆச்சி மனோரமா இந்தப் படத்தில் தான் அறிமுகமானார். திராவிடக் கொள்கை கொண்ட கண்ணதாசன் பிராமணரான டி.ஆர். மகாலிங்கத்தையே ‘எங்கள் திராவிடப் பொன்னாடே..’ என்று பாடச் செய்து படத்தினை வெற்றிப் படமாக்கினார் கண்ணதாசன். இதிலிருந்து தான் கவியரசர் பாடலாசிரியராகவும் உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.