அடுக்கடுக்காக உயரும் பலி எண்ணிக்கை : 151 பேருக்கு மேல் பலி கொண்ட வயநாடு நிலச்சரிவு: நாட்டை உலுக்கிய சோகம்

By John A

Published:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை காட்டாற்று வெள்ளத்திலும், மண்ணிலும் புதைந்து 151 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் தொடர்ந்து பெய்து வந்த தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து அதி கன மழையாகப் பெய்தது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2.00 மணியளவில் மலைப்பிரதேசமான வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் சூரமலை, முண்டகை ஆகிய பகுதிகளில் குடியிருப்புப் பகுதி முற்றிலுமாக மூழ்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இதுவரை 151 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் உயிரிழந்துள்ளனர். நாட்டையை உலுக்கிய இந்த இயற்கைப் பேரழிவினை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மேலும் இன்றும் நாளையும் பேரிடர் துக்கத்தை அனுசரிக்கும் விதமாக அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்படும் எனவும் கூறியிருக்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.

மீட்புப் பணியில் ராணுவத்தினைச் சேர்ந்த 12 குழுக்கள், தேசியர் பேரிடர் மீட்புப் படையினர், தமிழகத்தினைச் சேர்ந்த மீட்புப் படையினர் உள்ளிட்ட குழுக்கள் இரவு,பகல் பாராமல் மீட்புப் பணியினை மேற்கொள்கின்றனர். மேலும் வயநாடு பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு 572 மி.மீ. அதி கன மழை பெய்துள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மூணாறு சாலை போக்குவரத்து இல்லாமல் முற்றிலும் துண்டிப்பு.. தேனி, கொச்சி, உடுமலை பாதைகள் அவுட்

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், வானிலை மோசமாக இருப்பதாலும் தரைவழி, வான்வழி போக்குவரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்படி பல வகைகளிலும் இயற்கையின் கோரத் தாண்டவம் அரங்கேறியிருப்பதால் நாடே இந்த சோக நிகழ்வால் துயரம் அடைந்துள்ளது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான கோவை, நீலகிரி போன்ற பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. வால்பாறை, மூணாறு நெடுஞ்சாலை போன்ற பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.