124 கால இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார் சிங்கப் பெண் மனு பாக்கர். கடந்த 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33-வது ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
சுமார் 206 நாடுளைச் சேர்ந்த 10741 வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். மொத்தம் உள்ள 16 வகையான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் 117 பேர் களமிறங்கி உள்ளனர்.
22 வயசுல இப்டி ஒரு சம்பவமா.. முதல் சர்வதேச கிரிக்கெட் வீரராக ஜெய்ஸ்வால் பதித்த தடம்..
இந்தியாவிற்கான முதல் பதக்க கணக்கை துப்பாக்கி சுடுதல் பிரிவில் மனு பாக்கர் தொடங்கி வைத்தார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மகளிருக்கான துப்பாகி சுடுதல் போட்டியில் மூன்றாம் இடம் வென்று வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார் மனுபாக்கர். இதனையடுத்து நாடெங்கிலும் இவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வரும் வேளையில் தற்போது இரண்டாவது பதக்கத்தையும் தட்டித் தூக்கியிருக்கிறார் மனு பாக்கர்.
ஒலிம்பிக் போட்டிகளின் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வரும் வேளையில் அதே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் மனு பாக்கருடன், சரப்ஜோத் சிங் இணைந்து கொரியா அணியை எதிர் கொண்டனர். கடும் போராட்டத்திற்குப் பின்னர் பல சுற்றுக்களாக நடைபெற்ற போட்டியில் இறுதியில் இந்திய அணி கொரிய ஜோடியை 16-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மீண்டும் வெண்கலப் பதக்கத்தை தனது வசமாக்கினர் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி. இதுவரை இந்தியா விளையாடிய ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் ஒரே விளையாட்டு வீரர் 2 பதக்கங்களைப் பெறுவது இதுவே முதன் முறை. இந்த இமாலாய சாதனையை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் சிங்கப் பெண்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து தாங்களே சாதித்தது போல் கொண்டாடி வருகின்றனர்.