தோண்டத் தோண்ட பிணங்கள்.. நாட்டை உலுக்கிய இயற்கை பேரழிவு.. வயநாடு நிலச்சரிவு சோகம்

By John A

Published:

இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா மலைப் பிரதேசமான கேரளாவின் வயநாடு பகுதி இன்று இயற்கைப் பேரழிவால் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதனால் கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

கேரளாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களான மூணாறு, வயநாடு, தேக்கடி ஆகிய மலைப்பகுதிகளில் கன மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. ஏற்கனவே பல இடங்களில் மீட்புக் குழுவினர் முகாமிட்டு வெள்ளப் அழிவுப் பணிகளை சீர் செய்து வந்த நிலையில் வயநாட்டில் இன்று அதிகாலை 2.00 மணி அளவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இந்த இயற்கைப் பேரழிவில் சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடுமையான காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அப்பகுதியே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதி இருந்த தடமே முற்றிலும் அழிந்துள்ளது. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு.. 500 குடும்பங்கள் காணவில்லையா? வயநாடு பகுதியில் அதிர்ச்சி..!

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவத்தின் ஒரு பிரிவும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் களத்தில் இறங்கியுள்ளது. இந்தப் பகுதிக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் நிலவியுள்ளது. மழைப்பொழிவுவும் குறையாததாலும், பாலங்கள் உடைந்துள்ளதாலும் மீட்புக் குழுவினர் அங்கு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இத்துயர இயற்கைப் பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் கேரளாவிற்கு உதவும் விதமாக ரூ.5 கோடி நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும் மீட்புப் பணிகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.