அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு.. 500 குடும்பங்கள் காணவில்லையா? வயநாடு பகுதியில் அதிர்ச்சி..!

By Bala Siva

Published:

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் சுமார் 500 குடும்பத்தைச் சேர்ந்த 1000 பேர் காணவில்லை என்றும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கேரளாவில் பெய்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் இன்று திடீரென அதிகாலை இரண்டு மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் 4 மணிக்கு மீண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சூரல் மலை, மேப்பாடி, முண்டகை  ஆகிய பகுதிகளில் இந்த நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அந்த பகுதிகளில் இருந்த சுமார் 500 குடும்பங்களில் உள்ள 1000 பேர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போலீசார், தீயணைப்பு படையினர், வனத்துறையினர், தேசிய மீட்பு படையினர் ஆகியோர் தற்போது மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் 7 பேர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

500 குடும்பங்களை சேர்ந்த 1000 பேர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் அவர்களை உயிருடன் மீட்கும் பணியை தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வயநாடு பகுதியில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் திரும்பவும் பக்கமெல்லாம் ஒரே அலறல் குரலாக கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ உதவி தேவைப்படுகிறது என்று கேரள அரசு கூறி இருப்பதை அடுத்து உடனடியாக ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்திய விமானப்படையும் மீட்பு பணிகளில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.