இந்தியன் 2 படத்துடன் டீன்ஸ் படத்தையும் மோத விட்டுருந்தார் பார்த்திபன். ஒரு பெரிய படம் ரிலீஸாகும்போது ஒரு சின்ன படத்தையும் அது கூட விட்டால் பெரிய அளவில் ஓபனிங் கிடைக்காது. தியேட்டர்களும் கிடைக்காது. இது தான் யதார்த்தமான உண்மை.
இது பார்த்திபனுக்கும் நல்லாவே தெரியும். இருந்தும் அவர் ஏன் அப்படி ரிலீஸ் செய்தார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு திருப்பூர் சினிமா விநியோகஸ்தர் சுப்பிரமணியம் பதில் சொல்கிறார்.
டீன்ஸ் படத்தின் ரிசல்ட் ரொம்ப சுமார் தான். அவர் புரிஞ்சிக்கவே மாட்டேன்றாரு. எங்கிட்ட கூட பேசினாரு. சார் ஒரு வாரம் கழிச்சி ரிலீஸ் பண்ணுங்க. ஓபனிங் கிடைக்கும். ஏன்னா இது பெரிய படமா இருக்குன்னு சொன்னேன். ஆனா அவரு கேட்கல. உறுதியா சொல்றேன். அப்படி படத்தை ரிலீஸ் பண்ணது தவறு தான். அவரு சொல்றாரு நான் புதிய பாதை படத்தை அப்படித்தான் ரிலீஸ் பண்ணினேன்னு.
40 வருஷத்துக்கு முன்னாடி இருந்ததைப் பத்தி இன்னிக்கு சொன்ன பிரயோஜனம் கிடையாது. அன்னைக்கு தீபாவளி வந்துச்சுன்னா 5 ஹீரோவோட படங்கள் ரிலீஸாகும். அப்போ 4500 தியேட்டர் இருந்துச்சு. இன்னைக்கு ஸ்கிரீன்ஸே 1100 தான் இருக்கு.
400 தியேட்டர் தான் இருக்கும். இப்போ போயி படத்தை ரிலீஸ் பண்ணினா அந்த 400 தியேட்டர்ல தான் போடுவாங்க. வேற எந்த தியேட்டரும் கிடைக்காது. இவங்க கூட ரிலீஸ் பண்ணிக்க வேண்டியது.
அப்புறம் தியேட்டர்காரரைக் குறை சொல்றது. எனக்கு ஷோ கொடுக்கல. இருக்குற சூழ்நிலையை இவங்க புரிஞ்சிக்கணும். இந்தியன் 2 ரிசல்ட் சுமாரா இருந்ததால அடுத்த வாரம் படமே போடுறதுக்கு இல்ல.
உறுதியா சொல்றேன். இப்போ 50 லட்சம் கலெக்ட் ஆகியிருக்குன்னா ஒரு வாரம் கழிச்சி வந்துருந்துதுன்னா கண்டிப்பா 1 கோடி ரூபா கலெக்ஷனா ஆகியிருக்கும். டபுள் கலெக்ஷன் ஆகியிருக்கும். பெரிய ஓபனிங்கும் கிடைச்சிருக்கும்.
எல்லா தியேட்டர்லயும் இந்தியன் 2 ரிலீஸ் ஆகிறப்போ டீன்ஸ் படத்தை விட்டதனால 2 ஷோ ஓபனிங் போட்டுருந்தாங்க. ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் ஆகியிருந்தா 5 ஷோ போட்டுருப்பாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கமல் ஷங்கர் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்த படம் இந்தியன் 2. இந்தப் படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையில் வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அதனால் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
அதே சமயம் பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்த டீன்ஸ் படமும் ரிலீஸானது. இந்த இரு படங்களுமே கடந்த ஜூலை 12ல் தான் ரிலீஸ். ஒரு பெரிய படத்துடன் சின்ன பட்ஜெட் படம் மோதும் போது கண்டிப்பாக அந்தப் படத்திற்கு பெரிய அளவில் ஓபனிங் இருக்காது. அது நல்ல கதையாக இருந்தாலும் சற்றுப் பொறுத்து இருந்து இருக்கலாம்.