திண்டிவனம் : பக்தி முற்றிவிட்டால் எந்த எல்லைக்கும் பக்தர்கள் செல்வார்கள் என்பதற்கு அடையாளமாக திண்டிவனம் அருகே உள்ள கிடங்கல் கோட்டை கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் தங்கள் மேல் மிளகாய் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.
வழக்கமாக கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவோர் சுவாமிக்கு காவடி எடுப்பது, அலகு குத்துவது, தீ மிதிப்பது, அக்னி சட்டி எடுப்பது, அன்னதானம் வழங்குவது, கோவில் திருப்பணிகளைச் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது என தங்களது நேர்த்திக்கடன்களைச் செய்து வழிபட்டு வருவது காலம் காலாமாக செய்துவரும் வழக்கமாகும்.
இன்னும் சில இடங்களில் தலையில் தேங்காய் உடைப்பது, கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு பிரசாதங்கள் தயாரிப்பது என விபரீத நேர்த்திக் கடன்களையும் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் திண்டிவனம் அருகே உள்ள கிடங்கல் கோட்டை கிராமத்தில் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அன்பநாயக ஈஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வயானை உடனுறை ஆறுமுகப்பெருமான் சன்னதியில் இன்று 58-வது ஆடிக்கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள் வித்தியாசமான முறையில் குடங்களில் மிளகாயை அரைத்து வைக்கப்பட்டிருந்த கலவையை தலைவழியாக ஊற்றி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். சுமார் 37 பக்தர்களுக்கு இந்த நூதன நேர்த்திக்கடன் வழிபாடு நடத்தப்பட்டது.
பொதுவாக பொள்ளாச்சி மாசாணி அம்மன் போன்ற சில திருத்தலங்களில் மட்டும் அம்மனுக்கு மிளகாய் அரைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் இங்கு பக்தர்களுக்கு மிளகாய் அபிஷேகம் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பக்தி, ஆன்மீகம் என்ற நோக்கில் செய்யப்படும் சில விபரீத வழிபாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.