இதென்ன சஞ்சு சாம்சனுக்கு வந்த சோதனை.. ஜடேஜா, ஹர்திக் வரிசையில் மோசமான சாதனை..

By Ajith V

Published:

கடந்த சில ஆண்டுகளாகவே சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு இந்திய அணியில் சரியாக கிடைக்கவில்லை என பரவலாக ஒரு கருத்து இருந்து வருகிறது. உலக கோப்பை உள்ளிட்ட முக்கியமான தொடர்களில் நல்ல திறன் இருந்தும் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்யவில்லை என ரசிகர்கள் மட்டுமில்லாமல் கிரிக்கெட் உலகில் பிரபலமாக இருக்கும் பலரும் கூட கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

கடந்தாண்டு பல முக்கியமான தொடர்களில் புறக்கணிக்கப்பட்டு வந்த சஞ்சு சாம்சன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டியில் சதம் அடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து நடந்த ஐபிஎல் போட்டியிலும் ராஜஸ்தான் அணியின் சிறந்த கேப்டனாக மட்டும் இல்லாமல் பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்த சஞ்சு சாம்சனுக்கு டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைத்திருந்தது.

ரிஷப் பந்த் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஆடி வந்ததால் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு இந்திய அணியில் கிடைக்கவில்லை. இருந்தாலும் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அவர் இடம் பிடித்திருந்ததே பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வந்தது.

அப்படி ஒரு சூழலில் தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பிடித்திருந்த சஞ்சு சாம்சன் தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்திருந்தார். இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரண்டிலுலமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் சொந்தமாக்கி உள்ளது. இதன் முதல் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டதால் ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக ஆடும் வாய்ப்பு சாம்சனுக்கு கிடைத்திருந்தது. மேலும் இலக்கை நோக்கி ஆட தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரராக வந்த சாம்சன், தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை நிச்சயம் சிறப்பாக பயன்படுத்தி ரன் சேர்ப்பார் என எதிர்பார்த்தனர்.

ஆனால் முதல் பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார் சாம்சன். டி20 போட்டிகளை விட ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்து தன்னை நிரூபித்து வரும் சஞ்சு சாம்சனை டி20 போட்டியில் மட்டும் தேர்வு செய்தது பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் அவர் முதல் பந்திலேயே அவுட்டானது ரசிகர்களுக்கு இன்னும் ஏமாற்றம் அளித்துள்ளது என்றே சொல்லலாம்.

இதற்கிடையே தான் மிக மோசமான ஒரு சாதனை பட்டியலிலும் தற்போது சஞ்சு சாம்சன் பெயர் இடம் பிடித்துள்ளது. டி20 சர்வதேச போட்டிகளில் ஒரு இந்திய வீரர் பேட்டிங் செய்த முதல் 25 இன்னிங்சில் குறைந்த சராசரி இருக்கும் பட்டியலில் முதலிடத்தில் ரவீந்திர ஜடேஜா (15.3) உள்ளார். இதற்கு அடுத்தபடியாக ஹர்திக் பாண்டியா (16.3) இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது வீரராக சஞ்சு சாம்சன் 20.2 சராசரியுடன் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.