அமீர் சுல்தான் என்ற இயற்பெயரைக் கொண்ட இயக்குனர் அமீர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். அமீர் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார்.
ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அமீர். பாலாவுடன் இணைந்து 1999 ஆம் ஆண்டு ‘சேது’ திரைப்படத்திலும் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘நந்தா’ திரைப்படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
பின்னர் மறுபடியும் சூர்யாவுடன் இணைந்து 2002 ஆம் ஆண்டு ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்தத் படத்தில் தான் த்ரிஷா நாயகியாக அறிமுகமானார். முதல் படமே நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் படமாக அமீருக்கு அமைந்தது.
அடுத்ததாக ஜீவா நடிப்பில் ‘ராம்’, கார்த்தியை அறிமுக நாயகனாக வைத்து ‘பருத்திவீரன்’, ஆகிய திரைப்படங்களை இயக்கினார் அமீர். இயக்குனர் குறைந்த அளவில் படங்களை இயக்கியிருந்தாலும் தனித்துவமான கதைகளை கொண்டு இயக்கியதன் மூலம் பிரபலமானவர். படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் ‘யோகி’, ‘வட சென்னை’, ‘மாறா’ போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார் அமீர். வருடத்திற்கு ஒரு படம் கொடுக்கும் இயக்குனர் நான் அல்ல. என்னால் செய்ய முடிந்ததை, குறைந்த அளவில் படம் எடுத்தாலும் தரமானதாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் நான் என்று சொல்பவர் அமீர்.
தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இயக்குனர் அமீரிடம் பத்திரிகையாளர்கள் அரசியலில் ஆர்வம் உண்டா என்று கேட்ட கேள்விக்கு, நான் அரசியலை விரும்புபவன், விஜய், சீமான் அவர்கள் என்னை அழைத்தால் நான் கண்டிப்பாக அவர்களுடன் இணைந்து அரசியலில் பணியாற்ற தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.