ஒரு காலத்தில் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் ஆடி வந்த நிலையில், தற்போது ஐபிஎல் தொடர் உள்ளிட்ட பல்வேறு குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் காரணமாக நிறைய இளம் வீரர்களும் இந்திய அணிக்காக சர்வதேச அரங்கில் ஜொலிக்கத் தொடங்கி விட்டனர். இந்திய அணியிலும் கூட சமீப காலமாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களான ஜெய்ஸ்வால், ரியான் பராக், ருத்துராஜ், அபிஷேக் ஷர்மா என பல வீரர்கள் கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளிலும் தங்கள் திறனை நிரூபித்து வருகின்றனர்.
இந்த வரிசையிலேயே இந்திய அணி கண்ட மிக முக்கியமான ஒரு இளம் வீரர்களில் ஒருவர் தான் ஜெய்ஸ்வால். தொடக்க வீரராக களமிறங்கி ஆடி வரும் ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி, பல சர்வதேச பந்து வீச்சாளர்களை நொறுக்கி தள்ளியதுடன் பல்வேறு முக்கியமான சாதனைகளையும் படைத்து வருகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் கூட தற்போது அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஜெய்ஸ்வால், இந்த ஆண்டு அதிக ரன் அடித்த சர்வதேச வீரர்களிலும் டாப் இடத்தில் உள்ளார். ஆரம்பத்திலேயே அதிரடி காட்டி பவர் ப்ளேவில் நிறைய ரன்களை சேர்த்து இந்திய அணி அதிக ஸ்கோர் எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் தொடக்க வீரராக தற்போது ஜெய்ஸ்வால் ஜொலித்து வருகிறார்.
இதனிடையே, இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்திருந்தார். 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே அதிரடி ரூபத்தை எடுத்ததால் இந்திய அணி அந்த போட்டியில் 213 ரன்களை சேர்த்திருந்தது.
கடந்த பல தொடர்களாகவே இதே போன்ற ஒரு அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியிலும் வெளிப்படுத்தி வரும் ஜெய்ஸ்வால் நிச்சயம் வருங்காலத்தில் முக்கியமான இந்திய வீரராக உருவெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 20 டி20 இன்னிங்ஸ்கள் ஆடியுள்ள ஜெய்ஸ்வால் பல போட்டிகளில் நிறைய ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்திருந்தார்.
அப்படி ஒரு சூழலில் மற்ற எந்த போட்டிகளிலும் நடைபெறாத ஒரு விஷயம் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு நடந்ததை பற்றி தற்போது பார்க்கலாம். இதுவரை அவர் ஆடிய 20 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு முறை கூட ஸ்டம்பிங் முறையில் அவுட்டானது கிடையாது. ஆனால், இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹசரங்காவின் பந்து வீச்சில் குஷால் மெண்டிஸ் மூலம் ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டிருந்தார்.
இத்தனை போட்டிகளில் அதிலிருந்து தப்பி வந்த ஜெய்ஸ்வால், முதல் முறையாக ஸ்டெம்பிங் அவுட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.