கோவில்களில் துலாபாரம் கொடுக்கும் சடங்கின் வரலாறும் சிறப்புகளும்…

By Meena

Published:

மக்கள் கோவில்களில் கொடுக்கும் நேர்த்திக்கடன்களில் ஒன்று தான் துலாபாரம். துலாபாரம் என்பது புராண காலத்திலும், தொன்றுதொட்ட பழமையான காலத்திலிருந்த்தும் செய்யப்பட்டு வரும் பிரபலமான சடங்காகும். துலாபாரம் என்பது நம் எடைக்கு எடை பொருள் அல்லது பணம் கொடுப்பதாகும். இந்த துலாபாரம் சடங்கின் வரலாறு என்ன என்பதை இனிக் காண்போம்.

இந்த துலாபாரமானது கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த காலத்திலேயே அரங்கேறியுள்ளது. பகவான் கிருஷ்ணரின் மனைவிகளான ருக்மணி மற்றும் சத்தியபாமா ஆகியோரிடையே யாருக்கு கிருஷ்ணரிடம் அதிக அன்பு உள்ளது என்ற போட்டி எழுந்தது. இதற்கு துலாபாரம் சடங்கை நிகழ்த்தலாம் என்று பகவான் கிருஷ்ணர் முடிவு செய்தார்.

துலாபார தொட்டிலில் ஒரு பக்கம் கிருஷ்ணர் அமர்ந்துவிட, மறுபக்கம் சத்யபாமா தங்கம், வைரம், வைடூரியம் என அனைத்தையும் நிரப்பினார். ஆனால் கிருஷ்ணரின் துலாபாரம் மேல் ஏறவில்லை. ஆனால் ருக்மணியோ கிருஷ்ணருக்கு விருப்பமான ஒரு துளசி இலையை எடுத்து அதில் அவர் பெயர் எழுதி துலாபாரத்தில் வைத்ததும் அது கிருஷ்ணருக்கு இணையாக துலாபாரம் நின்றது. இது புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னர் காலத்தில், மதுரையை மீட்ட சுந்தரபாண்டிய மன்னன் திருவரங்கத்தில் இருக்கும் ரங்கநாதனுக்கு திருவரங்க ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் துலா மண்டபங்கள் அமைத்து பொன்னையும், நவரத்தினங்களையும் கோவிலுக்கு கொடுத்ததாக பல்வேறு நூல்கள் உரைக்கின்றன.

நோயினால் பாதிக்கப்பட்டோர், உடல் நலம் குன்றியவர் என மக்கள் துலாபார சடங்கை மேற்கொண்டு வருகின்றனர். துலாபாரத்தில் ஒருவரின் எடைக்கு ஈடாக தங்கம், வெள்ளி, நாணயங்கள், மஞ்சள், அரிசி, வெல்லம், பருப்பு வகைகள், பழங்கள், தானிய வகைகள், நெல் போன்றவற்றை ஆலயங்களுக்கு மக்கள் வழங்குவர். துலாபாரத்தில் பெறப்பட்ட பொருட்களை வைத்து கோவிலின் சுபகாரியங்களுக்கு பயன்படுத்தும்ப்போது கொடுத்தவர் கஷ்டங்கள், நோய்நொடிகள் விலகும் என்பது நம்பிக்கை.