தோனிக்கு கூட கிடைக்காத பாக்கியம்.. ஒரே ரன்னில் தவற விட்ட ரிஷப் பந்த்.. என்ன நடந்தது?..

By Ajith V

Published:

ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனியால் முடியாமல் இருந்த விஷயத்தை ரிஷப் பந்த் நூலிழையில் தவறவிட்ட முக்கியமான சாதனை என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம். இந்திய அணியை பொறுத்த வரையில் தோனிக்கு பிறகு நிறைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உருவாகி உள்ளார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

கே எல் ராகுல் தொடங்கி ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், துருவ் ஜூரேல், பரத் என பல இளம் விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் எந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை ஆட வைப்பது என்பதில் தேர்வுக் குழுவுக்கு மிகப்பெரிய குழப்பம் தான் இருந்து வருகிறது.

ஆனாலும் தோனி, கே எல் ராகுல் ஆகியோருக்கு பிறகு தொடர்ந்து தற்போது ரிஷப் பந்த் தான் அனைத்து வடிவிலான போட்டியிலும் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். நடுவிலே விபத்து ஒன்றில் சிக்கி இருந்த ரிஷப் பந்த், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆடாமல் இருந்து வந்த சூழலில் ஐபிஎல் தொடருக்கு பின்னர் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் ஆடி வருகிறார்.

விக்கெட் கீப்பர் இடத்திற்கு இந்திய அணியில் போட்டி அதிகமாக இருப்பதால் ரிஷப் பந்த் கொஞ்சம் சிறப்பாக ஆடுவதில் தடுமாற்றம் கண்டாலே அதற்கான வாய்ப்பு பறிபோய் விடும் என்ற நிலை தான் உள்ளது. இதனால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை கச்சிதமாய் பயன்படுத்தி ரன் சேர்த்து வரும் ரிஷப் பந்த், சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக ஆடி ரன் சேர்த்திருந்தார்.

ஆரம்பத்தில் சற்று நிதானமாக ஆடிய ரிஷப் வந்து கடைசி கட்டத்தில் திடீரென விஸ்வரூபம் எடுத்து பவுண்டரிகளை பறக்க விட்டிருந்தார். முதல் 19 பந்துகளில் வெறும் 19 ரன்கள் மட்டும் எடுத்திருந்த ரிஷப் பந்த், 33 பந்துகளில் 6 ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்சருடன் 49 ரன்கள் எடுத்தார். அப்படி ஒரு சூழலில் தான் முதல் இந்திய விக்கெட் கீப்பராக கிடைக்கவிருந்த சாதனையை ஒரு ரன்னில் ரிஷப் பந்த் தவற விட்டிருந்தது பற்றி தற்போது பார்க்கலாம்.

இலங்கை மண்ணில் எந்த இந்திய விக்கெட் கீப்பரும் டி20 சர்வதேச போட்டியில் அரைச்சதம் அடித்தது கிடையாது. தோனி, கே எல் ராகுல் உள்ளிட்ட பலராலும் அது முடியாமல் போக, அந்த வாய்ப்பு ரிஷப் பந்திற்கு தற்போது அமைந்திருந்தது. ஆனால் அவர் 49 ரன்களில் அவுட்டாகி அந்த பொன்னான வாய்ப்பை இழந்து பெரும் சாதனையை தவறவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.