24 கோடிக்கு டர்ன் ஓவர்.. ஜிஎஸ்டி கட்டுங்க.. வேலை தேடும் இளைஞருக்கு வந்த நோட்டீஸ்.. அதிர்ச்சி தகவல்..!

By Bala Siva

Published:

டிப்ளமோ படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞருக்கு நீங்கள் 24 கோடி டர்ன் ஓவர்  செய்திருக்கிறீர்கள், உடனே ஜிஎஸ்டி கட்டுங்கள் என நோட்டீஸ் வந்திருப்பது வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

வேலூர் பகுதியைச் சேர்ந்த முகமது நயிமுதீன் என்பவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் திடீரென அவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜில் நீங்கள் சொந்த பிசினஸ் செய்வதன் மூலம் 24 கோடி டர்ன் ஓவர் செய்திருப்பதால், அதற்குரிய ஜிஎஸ்டியை கட்டுங்கள் என்று கூறப்பட்டிருந்தது.

உடனே இது குறித்து நயிமுதீன் தனது நண்பரிடம் விசாரித்த போது அவரது பான் கார்டில் போலியாக ஒரு நிறுவனம் இயங்கி 24 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்திருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த நிறுவனம் கோவையில் உள்ள ஒரு குறிப்பிட்ட முகவரியில் இயங்குவதாக கூறப்பட்டிருந்த நிலையில் அந்த முகவரிக்கு போய் முகமது நயிமுதீன் சென்று பார்த்த போது அப்படி ஒரு நிறுவனமே அங்கு செயல்படவில்லை என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து ஜிஎஸ்டி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது பான் கார்டு முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதை கூறிய போது உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையில் புகார் அளித்த போது வேலூரில் இதுபோன்ற 60க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி மோசடி புகார்கள் குவிந்திருக்கிறது என்று எஸ்பியே கூறியதாக தெரிகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக முகமது நயிமுதீன் பான் கார்டை பயன்படுத்தி 24 கோடி வரை டர்ன் ஓவர் செய்திருக்கிறார்கள் என்றும் குறிப்பாக கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 8 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்திருக்கிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இப்போது அந்த மர்ம நிறுவனத்தையும் அதை சார்ந்த நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். எனவே உங்களது பான் கார்டு முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவ்வப்போது எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.