உணவு டெலிவரி செய்யும் நபர் 10 ரூபாய் கூடுதலாக கேட்டதாகவும் அந்த பணத்தை தர முடியாது என்று கூறியதற்காக அந்த உணவை அவரே சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நொய்டா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சமீபத்தில் ஓலா மூலம் உணவு ஆர்டர் செய்த நிலையில் அந்த உணவை டெலிவரி செய்யும் நபர் செல்போனில் தொடர்பு கொண்டு 10 ரூபாய் அதிகம் கேட்டதாக தெரிகிறது. முதலில் அதிக பணம் தர மாட்டேன் என்று சொன்ன தொழிலதிபர் அதன் பின்னர் ஒப்புக்கொண்டதாகவும் ஆனாலும் 45 நிமிடம் தாமதம் ஆகியும் உணவு வரவில்லை என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து உணவு டெலிவரி செய்யும் நபர் அருகில் தான் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த பகுதிக்கு சென்று அவர் பார்த்தபோது தான் ஆர்டர் செய்த உணவை அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அது நான் ஆடர் செய்த உணவு, நான் அதற்காக பணம் கொடுத்துள்ளேன்’ என்று கூறிய போது அந்த உணவு டெலிவரி செய்யும் நபர் ’அதற்காக என்ன இப்ப, உங்களால் என்ன செய்ய முடியும்? என்று அசால்ட்டாக பதில் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஓலா நிர்வாகத்திடம் புகார் அளித்ததாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இது தனது மிக மோசமான அனுபவம் என்றும் வீடியோவுடன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்த பலர் தங்களுக்கும் இதே போன்ற அனுபவம் நிகழ்ந்தது என்றும் ஓலா டெலிவரி மேன்கள் சரியாக டெலிவரி செய்வதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
இது குறித்து ஓலா நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெலிவரி செய்பவர்கள் மிகவும் தாமதமாக அதே நேரத்தில் மரியாதை குறைவாக நடந்து கொள்கிறார்கள் என்றும் பலர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.