ஆடி மாத பண்டிகைகளில் மிகவும் விஷேசமானது ஆடி கிருத்திகை நாளாகும். இந்த நாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் அன்று இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜூலை 30 ஆம் தேதி ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படும்.
தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகையான ஆடி கிருத்திகை நாளன்று தான் தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் சூரனை அழிக்க சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவரதரித்தார். முருக பக்தர்கள் இந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுவர்.
ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும். அன்றைய தினம் முருகனின் ஆறுபடை வீடுகளில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், ஹோமங்கள், தேர் பவனி ஆகியவை நடக்கும். இது தவிர நாடெங்கிலும் இருக்கும் முருகன் கோவிலில் விழாக்கோலம் கொண்டிருக்கும்.
பொது மக்கள் இந்த ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்து முருகன் கோவில்களில் ஒன்றுகூடி வழிபாடு செய்வர். மேலும் இந்த நாளில் மக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்றவைகளை செய்து முருகனை உளமார வேண்டிக் கொள்வர். வீடுகளிலும் சிறப்பு பூஜைகளை பக்தர்கள் மேற்கொள்ளுவர்.
ஆடி கிருத்திகை அன்று முருகனை வழிபடும் பக்தர்களுக்கு, அவர்களது வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைப்பதாக ஐதீகம். மக்கள் தங்களது பிரச்சனைகள் தீர்ந்து புதிய வழிகள் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதனால், இந்த நாளில் பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வழிபடுகின்றனர்.