திருவண்ணாமலை : பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. உலகெங்கிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரைத் தரிசிக்க வருகின்றனர். குறிப்பாக கிரிவலம் வருவது மிகுந்த புண்ணியம் என்பதால் கிரிவலப்பாதை எப்பொழுதுமே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
மேலும் அரோகரா கோஷமும் விண்ணைப் பிளக்கும். பௌர்ணமி, கார்த்திகை தீபத் திருவிழா போன்றவை இங்கு பிரசித்தி பெற்றவை. அருணாசலேஸ்வரர் சன்னதியுடன் உண்ணாமுலை அம்மனும் இங்கு வீற்றிருக்கிறார்.
இப்படி நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கோவிலில் காணிக்கையாக பல இலட்சங்களும், தங்கம் வெள்ளி உள்ளிட்ட பொருட்களும் அறநிலையத்துறைக்குக் கிடைக்கிறது. இப்படி அதிக வருமானம் அள்ளித் தரும் கோவிலாக இருப்பினும் கோவிலில் அம்மனுக்கு ரேஷன் புடவை சாத்தப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
டிராபிக் விதிகளை மீறுபவர்களை கண்டுபிடிக்கும் ஏஐ டெக்னாலஜி.. அடுத்த நிமிடமே அபராதம் தான்..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்ணாமுலை அம்மன் சந்நதிக்கு அருகில் உள்ள அம்பாள் சிலைக்கு பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் சேலை அணிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பக்தர் ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட பக்தர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.
லட்சக்கணக்கில் வருமானத்தினை அளிக்கும் இக்கோவிலுக்கு அம்பாளுக்குச் சார்த்த வேறு புடவைகளே கிடையாதா என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து அந்த ஆடைக்குப் பதில் வேறு புடவை சாத்தப்பட்டது. பக்தர்கள் கொடுத்ததில் காட்டன் சேலை என நினைத்து ரேஷன் கடை சேலையைச் அம்மனுக்குச் சாத்தியதாக சிவாச்சார்யர்கள் விளக்கம் அளித்தனர்.