தேனி: நடிகர் தனுஷ் 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் வெற்றி பெற வேண்டிய பிராத்தனை செய்வதற்காக தனுஷ் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம், முத்துரங்காபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலான ஸ்ரீ கஸ்தூரியம்மாள் ஸ்ரீ மங்கம்மாள் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான தனுஷின் சொந்த ஊர் தேனி மாவட்டம் சங்கராபுரம் ஆகும். அவரது தந்தை கஸ்தூரி ராஜா தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனுஷ் பிறக்கும் முன்பே கஸ்தூரி ராஜா சினிமாவில் இயக்குனராகும் ஆசையில் சென்னைக்கு சென்றுவிட்டார். அவரது மகன் தனுஷ் தற்போது மிகப்பெரிய நடிகர் ஆகிவிட்டார். அவரது மகன் செல்வராகவன் மிகப்பெரிய இயக்குனர் ஆகிவிட்டார்.
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாடலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது
இந்நிலையில், தனுஷ் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம், முத்துரங்காபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலான ஸ்ரீ கஸ்தூரியம்மாள் ஸ்ரீ மங்கம்மாள் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயிலில் அம்பாள் மற்றும் சுவாமிக்கு மலர் மாலை அணிவித்து, பூஜைகள் நடத்தி சாமி தரிசனம் செய்தார். அப்போது கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தனுஷ் மற்றும் குடும்பத்தினரை வரவேற்று இருக்கின்றனர்.அவர்களை பார்த்ததும் தனுஷ் கையெடுத்து கும்பிட்டு அவர்களிடம் நலம் விசாரித்து இருக்கிறார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த கோயில் புனரமைப்பு பணிக்கு தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரிராஜா பெரிய அளவில் நிதி கொடுத்து உதவி உள்ளார். 76 லட்சம் அளவிற்கு நிதி கொடுத்தார். அண்மையில் தான் இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. குல தெய்வமான இந்த கோயிலுக்கு தனுஷ் அடிக்கடி வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இன்று சொகுசு பேருந்தில் தனது மகன்கள் உள்பட குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றார். பின்னர் தேவாரம் அருகில் உள்ள தனுஷின் தாயார் வழி குலதெய்வ கோவிலான சங்கராபுரம் கருப்பசாமி கோயிலுக்கும் சென்று குடும்பத்தோடு வழிபட்டு இருக்கிறார்கள். அப்போது தனுஷ் சாமி சிலைகளின் முன்பு தான் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “இங்கு பறந்து கிடக்கும் பூமி உனக்கும் தந்ததையா.. இங்கு இருக்கும் அத்தனை சாமியும் உனக்கும் சொந்தமய்யா” என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்