மத்திய பட்ஜெட்டில் என்னென்ன வரி விலக்கு மற்றும் வரி குறைப்புகள்.. முழு விவரம்

By Keerthana

Published:

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் என்னென்ன வரி விலக்கு மற்றும் வரி குறைப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது என்பதை பார்ப்போம்.

புற்றுநோய் சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. லித்தியம், காப்பர், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.. தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. சூரிய எரிசக்தி உற்பத்திக்கான உபரி பாகங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி கடத்தலைத் தடுக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி முழுமையாக குறைக்கப்படவில்லை என்றாலும் கூட, 15 விழுக்காட்டிலிருந்து 6% ஆக குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4200 வரை குறையக் கூடும்.

அதேபோல் மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு செல்போன் விலை இப்போது உள்ளதைவிட 15 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஆயத்த ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட வரியும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால் ஆயத்த ஆடை உற்பத்தி செய்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இன்றைய பட்ஜெட்டில் புதிய வருமானவரி முறையில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அதனால், ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.17,500 வரை மிச்சமாகும். ஆனால், பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை..

இதேபோல் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகரப் பகுதிகளில், பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.