இயக்குநர் ராசு மதுரவன் குடும்பத்திற்கு உதவிய சிவகார்த்திகேயன்.. அந்த மனசு தான் சார் கடவுள்..!

By John A

Published:

தமிழ் சினிமாவில் இயக்குநர் விசுவிற்கு அடுத்தபடியாக குடும்பக் கதைகளுக்கு பெயர் பெற்ற இயக்குநராக விளங்கியவர் தான் இயக்குநர் ராசு மதுரவன். ஜனரஞ்சக திரைப்படங்களின் இயக்குநர் மணிவண்ணனிடம் சினிமா கற்றுக் கொண்டு 1999-ல் பிரசாந்த், ரம்பா ஆகியோர் நடித்த பூமகள் ஊர்வலம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இதனையடுத்து மாயாண்டி குடும்பத்தார் படம் மூலம் ஹிட் கொடுத்து குடும்பக் கதைகளின் இயக்குநராக உயர்ந்தார். உறவுகளின் உன்னதத்தை ராசுமதுரவன் படங்கள் ஆழமாகப் பேசியதால் இவர் படங்கள் எப்போது பார்த்தாலும் குடும்ப உறவுகளின் அருமைய உணர்த்தும்.

இதனையடுத்து பாண்டி, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் ஆகிய படங்களை இயக்கினார். திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராசு மதுரவனுக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்தால் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2013-ல் இயற்கை எய்தினார். இவருக்கு பவானி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் ராசுமதுரவனின் தற்போதைய குடும்ப நிலையை விகடன் இதழ் பேட்டி எடுத்து வெளியிட்டது. குடும்பக் கதைகளின் உன்னதத்தை தனது படங்களின் பேசியவரின் குடும்பத்தின் நிலை ஏழ்மையில் இருந்தது. இரு மகள்களை வைத்துக் கொண்டு சொந்த ஊரில் குழந்தைகளுக்கு பீஸ் கூட கட்ட முடியாமல் தவித்து வருவதாகவும், அவர் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற ஒருவர் கூட இதுவரை உதவி செய்யவில்லை என்றும் வருத்தத்துடன் பகிர்ந்திருந்தார்.

விஜய், சிம்பு, பிரசாந்த் இவர்களிடையே இப்படி ஒரு ஒற்றுமையா? அடடா ஆச்சரியக்குறி…!

இச்செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகியது. இதனையடுத்து இவர்களின் குடும்ப நிலையினை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் ராசுமதுரவனின் இரு குழந்தைகளின் படிப்புச் செலவினை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவர்களின் கல்விக் கட்டணமான ரூ.97,000-த்தை அக்குழந்தைகளின் கல்விக்காக வழங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் திருச்சியைச் சேர்ந்த விகடன் வாசகர் ஒருவரும் ரூ. 30,000 கொடுத்து உதவியிருக்கிறார். இதுகுறித்து ராசுமதுரவன் மனைவி பவானி கூறுகையில், “என் கணவர் படத்துல அத்தனை இயக்குநர்கள், நடிகர்கள் நடிச்சிருக்காங்க ஆனா ஒருத்தர் கூட இதுவரை பேசியது கிடையாது. ஆனா எங்களோட நிலைமையை விகடன்ல வந்த செய்தியைப் பார்த்து புரிஞ்சிக்கிட்டு சிவகார்த்திகேயன் உதவி செஞ்சிருக்காரு. அவருக்கு எங்கள் நன்றிகள்.” என்று கூறியிருக்கிறார்.