இன்னும் 3 சிக்ஸ் தான்.. அது மட்டும் நடந்துட்டா… சர்வதேச கேப்டனாக ரோஹித் தொட போகும் உயரம்..

By Ajith V

Published:

கிரிக்கெட் போட்டிகள் என்றாலே இங்கு பந்து வீச்சாளர்களுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதை விட பேட்ஸ்மேன்களை ரசிப்பவர்கள் தான் அதிகம். விக்கெட்டுகள் நிறைய போனாலும் அதை விட சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்கள் பறக்க விடும் பேட்ஸ்மேன்களையும், அரை சதம், சதம் என நொறுக்க விடும் வீரர்கள் தான் பலருக்கும் ஃபேவரைட்.

அந்த வகையில், தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, கோலி உள்ளிட்ட பலரின் பேட்டிங்கிற்கும் அதிகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் கோலியை விட சிக்ஸர்கள் அதிகம் பறக்க விடுவது என்றால் நிச்சயம் ரோஹித் ஷர்மா தான். உலகின் பல முன்னணி சர்வதேச பந்து வீச்சாளர்களின் பந்தை மற்ற வீரர்கள் அடிக்க சிரமப்பட்டு சிங்கிள் ஓடவே தவித்த நிலையில் அது போன்ற பந்துகளை எல்லாம் மிக அசால்டாக எதிர்கொண்டுள்ள ரோஹித் ஷர்மா அனைத்தையுமே சிக்சருக்கு பறக்க விட்டுள்ளார்.

அதிலும் ஷார்ட் பந்துகளை ஃபுல் ஷாட் சிக்ஸர் அடிக்கும் ரோஹித்தை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நெருங்கவே யாரும் கிடையாது. பேட்டிங்கில் ஒரு பக்கம் பட்டையை கிளப்பும் ரோஹித் ஷர்மா, கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியை மிகச்சிறந்த பாதையில் வழி நடத்தி வருகிறார். கடைசியாக நடந்த மூன்று ஐசிசி தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்ததுடன் டி20 உலக கோப்பை தொடரையும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

ஏறக்குறைய 13 ஆண்டுகள் கழித்து இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்த ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி, பலவித பாராட்டுகளையும் பெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாக உள்ள இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியை மீண்டும் வழிநடத்த தயாராகி உள்ளார்.

டி20 உலக கோப்பையை முடித்து வைத்த அதே வெற்றிப் பயணத்தை மீண்டும் ஒருமுறை கேப்டனாக ரோஹித் ஷர்மா தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் கேப்டனாக ரோஹித் ஷர்மா படைக்கவுள்ள முக்கியமான சாதனை ஒன்றை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஒரு கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக இங்கிலாந்தின் இயான் மோர்கன் உள்ளார். இவர் இங்கிலாந்தின் கேப்டனாக இருந்த போது அனைத்து சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து 233 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா 231 சிக்ஸர்களை அடித்துள்ள நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மூன்று சிக்ஸர்களை அடித்து விட்டாலே உலக கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்சர் அடித்த கேப்டன் என்ற பெருமையை பெற்றுவிடலாம். இதனால் நிச்சயம் ஓய்வுக்கு பின்னர் திரும்பும் ரோஹித் ஷர்மா, ஒரே போட்டியில் மூன்று சிக்ஸர்கள் அடித்து முக்கிய இடத்தை பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.