பா.ஜ.கவுக்கு விழப்போகும் அடுத்த அடி.. பல்டி அடிக்கக் காத்திருக்கும் நிதீஷ்குமார்..

By John A

Published:

பாட்னா : பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மாதம் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கூட முழுமை பெறவில்லை. ஏற்கனவே கடந்த இரு தேர்தல்களிலும் பெரும்பான்மை பலத்துடன் தனியாக ஆட்சி அமைத்த பாரதிய ஜனதா கட்சி இந்த முறை மெஜாரிட்டியை இழந்து தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடு, பீகார் ஐக்கிய ஜனதா தளம்கட்சியின் நிதிஷ்குமார் மற்றும் பல கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்த முறை காங்கிரஸ் தலைமையிலா இண்டியா கூட்டணி வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் ராகுல் காந்தி பா.ஜ.கவை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் மோடி அரசின் தவறுகளையும், பா.ஜ.கவின் கொள்கைகளையும் விமர்சித்துப் பேசினார். இதுமட்டுமல்லாமல் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கும் நாடாளுமன்றத்தில் இனி துடிப்பான வலுவான குரலாக பிஜு ஜனதா தளம் செயல்படும் என தங்களது கட்சி நிலைப்பாட்டை அறிவித்தார். ஏற்கனவே ராகுல் காந்தியின் அதிரடியால் கலங்கிப் போன பா.ஜ.க., அடுத்து நவீன் பட்நாயக் முடிவால் அதிர்ச்சி அடைந்தது.

ஹெட்போனில் பாட்டு கேட்டு கொண்டே ரயில் தண்டவாளத்தில் நடந்த சிறுவர்கள்.. பரிதாப முடிவு..!

தற்போது பா.ஜ.க-வுக்கு மேலும் ஒரு செக் வைக்கும் விதமாக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரான நிதீஷ் குமார் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே கூட்டணி வைத்தார். ஆனால் மத்திய அரசு பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இதனையடுத்து பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஒரு பா.ஜ.க-வுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற உத்திரவாதம் அளித்ததனால் மட்டுமே கூட்டணியில் இணைந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்துகிறோம் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இதனால் பா.ஜ.க கலக்கம் அடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவின் பலம் 240 மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார் ஆகியோர்களின் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.