பகுஜன் சமாஜ் கட்சி புதிய தலைவராக ஆனந்தன் நியமனம்.. ஆம்ஸ்ட்ராங் மனைவிக்குப் புதிய பொறுப்பு

By John A

Published:

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் பொறுப்பில் இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் பகுதியில் புதிதாகக் கட்டிவரும் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா என திமுக அரசையும், காவல் துறையையும் எதிர்க் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், திரைப்பிரபலங்களும் கண்டனக் குரல் எழுப்பினர். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 11பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை குறிதித சிசிடிவி காட்சிகளும் வெளிவந்து பதைபதைக்க வைத்தன. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்-க்கு 16-ம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியும், நீதி கேட்டு பேரணியும் நடைபெற்றது. இதில் தலித் அமைப்பைச் சார்ந்தவர்களும், பகுஜன் சமாஜ் உறுப்பினர்களும், இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் தீனா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சாலையோரத்தில் பேப்பர் எடுத்துக் கொண்டிருந்தவருக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் செஞ்ச தரமான நெகிழ்ச்சி சம்பவம்

தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த மாநிலத் தலைவர் யார் என்று கட்சியினரிடையே குழப்பம் நீடித்தது. இயக்குநர் பா.ரஞ்சித் பெயரும் அடிபட்டது. இந்நிலையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் அசோக் சித்தார்த், கோபி நாத் ஆகியோர் தலைமையில் தேசியத் தலைவர் மாயாவதியின் பரிசீலனை மற்றும் ஆலோசனையில் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதர தமிழ்நாடு கமிட்டி உறுப்பினர்கள் விபரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.