உத்தரபிரதேச மாநிலத்தில் சலூன் கடைக்காரர் ஒருவரின் செல்போன் தொலைந்து விட்டதை அடுத்து அவர் மிகவும் சோகமாக இருந்ததை பார்த்த அவருடைய ரெகுலர் வாடிக்கையாளர் உடனே செய்த மேஜிக் காரணமாக ஒரு சில நிமிடங்களில் அந்த சலூன் கடைக்காரருக்கு புதிய செல்போன் கிடைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சோனு என்பவர் கடந்த சில ஆண்டுகளாக சலூன் கடை வைத்திருக்கும் நிலையில் அவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர் வாடிக்கையாளர் ஒவ்வொருவரையும் மதித்து செயல்படுபவர் என்றும் அந்த பகுதியில் அவர் மிக நல்ல பெயரை பெற்றிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சலூன் கடைக்காரர் சோனு மிகவும் சோகமாக இருந்ததை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் என்ன விஷயம் என்று கேட்க, தனது செல்போன் தொலைந்து விட்டதாக அவர் வருத்தத்துடன் கூறினார். இதனை அடுத்து அந்த வாடிக்கையாளர் உடனே தனது சமூக வலைதளத்தில் தன்னுடைய சலூன் கடைக்காரர் செல்போனை தொலைத்துவிட்டார், அவருக்கு ஒரு புதிய போன் வாங்கி கொடுக்க முடிவு செய்து இருக்கிறேன், அவருக்காக உதவி செய்யுங்கள், என்று கூறி ஒரு க்யூஆர் கோடையும் பதிவு செய்தார்
இந்த பதிவு சில நிமிடங்களில் வைரலாகிய நிலையில் மாநிலத்தில் உள்ள பலர் க்யூஆர் கோடு மூலம் தங்களால் முடிந்த பணத்தை அனுப்பினர். ஒரு சில நிமிடங்களில் 30 ஆயிரம் ரூபாய் சேர்ந்து விட்டதை அடுத்து செல்போனை தொலைத்த சலூன் கடைக்காரர்களுக்கு புதிய போன் வாங்கி கொடுத்தார். இது குறித்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து ’பணம் கொடுத்து உதவிய அனைவருக்கும் நன்றி என்றும், அந்த சலூன் கடைக்காரர் முகத்தில் தற்போது நான் சந்தோசத்தை பார்த்தேன்’ என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வருகிறது.